Skip to main content

“தருமபுரியில் விதைத்தால் அது தமிழ்நாடு முழுக்க முளைக்கும்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

Published on 24/07/2023 | Edited on 24/07/2023

 

If it is sown in Dharmapuri it will sprout all over Tamilnadu Chief Minister M.K.Stalin

 

தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று (24.7.2023) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  தலைமையில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமைத் தொடங்கி வைத்தார். 

 

அதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தமிழ்நாடு முழுமைக்குமான திட்டமாக இருந்தாலும், நான் எதற்காகத் தருமபுரிக்கு வந்திருக்கிறேன் என்றால், கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்னால் 1989 ஆம் ஆண்டு, இதே தருமபுரி மாவட்டத்தில்தான் மகளிர் சுயஉதவிக்குழு என்ற ஒரு மாபெரும் அமைப்பை அன்றைக்குத் தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர் தொடங்கி வைத்தார். எனவே தருமபுரியில் விதைத்தால், அது தமிழ்நாடு முழுக்க முளைக்கும் என்ற நம்பிக்கையால்தான் இன்றைக்குக் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தையும் இங்கு நாங்கள் தொடங்கி வைத்திருக்கிறோம்.

 

1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதைச் சீர்திருத்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்களைத் தந்தை பெரியார் நிறைவேற்றினார். அப்படி நிறைவேற்றிய தீர்மானங்களில் மிக மிக முக்கியமான ஒரு தீர்மானம்தான் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்கவேண்டும் என்ற அந்தத் தீர்மானம். 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் தந்தை பெரியார் அவர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை 1989ஆம் ஆண்டு 60 வருடங்களுக்குப் பிறகு சட்டமன்றத்திலே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை வழங்க வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்றித் தந்தவர்தான் கலைஞர். இதுதான் பெண்ணினத்திற்கு திராவிட இயக்கம் வழங்கிய மாபெரும் அதிகாரக் கொடை. இதன் அடுத்த கட்டமாகத்தான் மகளிர் உரிமைத் திட்டத்தை வடிவமைத்துள்ளோம்.

 

இல்லறப் பொறுப்புகளுடன் பல்வேறு பணிகளைச் செய்து கொண்டிருக்கக்கூடிய, அதன்மூலம் தங்களுடைய குடும்பங்களுக்கு, அந்தக் குடும்பத்தில் இருக்கக்கூடிய நபர்களுக்கெல்லாம் பணி செய்து அந்தக் குடும்பத்தின் உயர்வுக்கு உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய மகளிரின் உழைப்பை அங்கீகரிக்க வேண்டும். அதற்குரிய மரியாதை தரவேண்டும். இதனை மனதில் வைத்துக்கொண்டுதான், கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியாக திமுக சார்பில் வழங்கப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தோம்” எனப் பேசினார்.

 

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ். செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள்  ஜி.கே. மணி, எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்