தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதுபோல் ஆத்தூர் தொகுதியில் உள்ள ரெட்டியார்சத்திரம், தெற்கு ஒன்றியம் சார்பாக பண்ணைப்பட்டி ஊராட்சியில் உள்ள பண்ணைப்பட்டியில் ஊராட்சி சபைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவகுருசாமி தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். ஊராட்சி கழக செயலாளர் சுப்பையா வரவேற்று பேசினார்.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் முப்பெருந்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி பேசும்போது...
கடந்த மூன்று ஆண்டுகளாக கிராமங்கள் முழுவதும் வளர்ச்சிதிட்டங்கள் இல்லாமல் முடங்கிவிட்டன. நூறு நாள் வேலைத்திட்டத்தை முடக்க திட்டமிட்டு வருகின்றனர். அனைத்து கிராமங்களிலும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. அரசு வேலையில் சேர்வதற்கு லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவலநிலை உள்ளது. இந்த நிலைமை இன்னும் மூன்று மாதத்தில் மாறிவிடும், சட்டசபையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட ரெட்டியார்சத்திர ஒன்றிய விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று பேசியதற்கு வழங்கிவிட்டோம் என கூறுகின்றனர். ஆனால் மாநில அரசு வழங்கவில்லை. மத்திய அரசு வழங்கிய தொகையைத்தான் இவர்கள் கொடுத்துள்ளார்கள். பல லட்சம் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கில் கொடுத்தால் போதுமா? என கேள்வி எழுப்பினார். மத்தியில் மோடியும், மாநிலத்தில் எடப்பாடியும் தொடர்ந்து ஆட்சி செய்தால் தமிழகம் சுடுகாடு ஆவது உறுதி என்று கூறினார்.
இந்த கிராமசபைக் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் பண்ணைப்பட்டி ஜெகநாதன், ஆத்தூர் நடராஜன், ஊராட்சி செயலாளர் சுப்பையா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரம்மசாமி, முத்துசாமி, கன்னிவாடி பேரூர் கழக செயலாளர் வழக்கறிஞர் சண்முகம், அம்பாத்துரை ரவி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் முத்துப்பாண்டி, சண்முகம், வார்டு செயலாளர்கள் தெத்துப்பட்டி முருகையா, பொறியாளர் அணியைச் சேர்ந்த கபிலன் மற்றும் மகளிரணியினர், இளைஞரணியினருடன் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்!