Skip to main content

சொத்துக்காக மனைவியை கொன்ற கணவன்; போலீஸ் விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
A husband who lost his wife for property in erode

ஈரோடு மாவட்டம் கவுந்தப்படை அருகே பூமாண்டகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. விவசாயியான இவருக்கு பூரணி (28) என்ற மகள் இருந்தார். இவர் எஞ்சினியர் படிப்பை முடித்து பெங்களூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் கல்லூரி படித்த போது உசின்னியம்பாளையத்தைச் சேர்ந்த யுவராஜ் மகன் மதன்குமார் (28) என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி மதன்குமாரும் பூரணியும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர், தம்பதியர் இருவரும் சேர்ந்து பெங்களூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பூரணிக்கு பெண் குழந்தை பிறந்தது. 

இதனையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் 10 தேதி அன்று குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது பூரணி திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறி, கவுந்தப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பூரணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதில் அதிர்ச்சியடைந்த பூரணியின் குடும்பத்தினர், இந்த சம்பவம் குறித்து கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனே, இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதனை தொடர்ந்து பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பூரணியின் உடல் உடல்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வின் மூலம், பூரணி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதன் பின்னர் போலீசார் மதன்குமாரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், மதன்குமார் வசதியில்லாத குடும்பத்தை சேர்ந்தவர். பூரணி பணம் படைத்த வீட்டு பெண் என்பதால், பூரணியை மதன்குமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு, பூரணி அவரது பெற்றோரிடம் சொத்தில் பங்கு எதுவும் எனக்கு வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, பூரணிக்கு குழந்தை பிறந்த தகவல் அறிந்து  பூரணியை பார்க்க அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது, மதன்குமாரும், அவரது குடும்பத்தினரும் அவர்களை தடுத்து நிறுத்தி சொத்து கேட்டு தகராறு செய்து திருப்பி அனுப்பியுள்ளனர். பலமுறை சொத்தை பிரித்து வாங்குமாறு பூரணியிடம் மதன்குமாரும் அவரது குடும்பத்தினரும் வற்புறுத்தியுள்ளனர். ஆனால், பூரணி அதை ஏற்கவில்லை. இதனால், சொத்து எதுவும் தனக்கு கிடைக்காது என முடிவு செய்த மதன்குமார், பூரணியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். 

அதன்படி, சம்பவம் நடந்த அன்று, மதன்குமார் பூரணியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர், பூரணி தாய்ப்பால் கொடுக்கும்போது இறந்து விட்டதாக நாடகமாடியுள்ளார். இந்த கொலை சம்பவத்துக்கு மதன்குமாரின் பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்று தெரியவந்தது. மேலும், பூரணிக்கு பிறந்த குழந்தையையும் கொலை செய்துவிட்டு மகனுக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்கவும் மதன்குமாரின் பெற்றோர் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. சொத்து கிடைக்காததால், காதலித்த மனைவியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்