Skip to main content

ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி?

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் ஓட்டுநர் உரிமம் பெறுவது தலையாய கடமையாகும். இதை வாகனங்களை ஓட்டும் நபர்கள் கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும் .ஒவ்வொரு வரும் வாகனங்களை இயக்கும் போது போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி பயணம் செய்ய வேண்டும். அப்போது தான் பயணம் இனிய பயணமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. 

ஓட்டுநர் உரிமத்தை பெறுவது எப்படி ?
மோட்டார் வாகன சட்டம் - 1988 - ன் படி ஒவ்வொரு குடிமகனும் ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம்.

பழகுநர் உரிமம் (LLR) :
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன் , வாகனத்தை ஓட்டி பழகுவதற்கு பழகுநர் உரிமம் வேண்டும்.
1. 50CC - க்கு உட்பட்ட அல்லது கியர் இல்லாத இரு சக்கர வாகனத்திற்கு பழகுநர் உரிமம் பெற 16 
    வயதைக் கடந்திருக்க வேண்டும்.
2.கியர் உள்ள இரு சக்கர வாகனம்  மற்றும் இலகு ரக வாகனம் (Light Motor Vehicle) பழகுநர் உரிமம்
  பெற 18 வயதைக் கடந்திருக்க வேண்டும்.
3.போக்குவரத்து வாகனங்களுக்கான பழகுநர் உரிமம் பெற 20 வயதை கடந்திருக்க வேண்டும்.
4.பழகுநர் உரிமம் பெற சமந்தப்பட்ட நபர் நேரில் ஆஜராக வேண்டும்.

 

driving license

தேவையான படிவங்கள் : 

படிவம் -1 , படிவம் -2 மற்றும் படிவம் - 14 (ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி மூலமாக பெறபவர்களுக்கு) .

படிவத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் : 
1. இருப்பிட சான்று : 
 (பின்வரும் ஏதேனும் ஒன்று ) ,குடும்ப அட்டை , வாக்காளர் அடையாள அட்டை , ஆதார்     அடையாள அட்டை , LIC பாலிசி , மின் கட்டண அட்டை , தொலைபேசி ரசீது , அரசு அல்லது பிற   சம்பள ரசீது , பள்ளி சான்றிதழ் , பிறப்பு சான்றிதழ் , நோட்டரி வழக்கறிஞரின் உறுதிச்சான்று     வாக்குமூலம்.

2.வயது சான்று :
பிறப்பு சான்று , LIC பாலிசி , பள்ளிச்சான்று , நோட்டரி வழக்கறிஞரின் உறுதிச்சான்று பெற்ற வாக்குமுலம் , அரசு மருத்துவமனை சான்றிதழ் .

3. பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் நான்கு தேவை.
 விண்ணப்பத்தாரர் உரிமம் வழங்கும் அதிகாரியின் முன் சென்று அன்றே ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளலாம்.

ஓட்டுநர் உரிமம் :
பழகுநர் உரிமம் பெற்ற நபர் , அது பெற்ற நாளில் இருந்து 30 நாட்கள் முடிவடைந்த பின் , அடுத்த 6 மாத காலத்துக்குள் FORM - 4 அல்லது FORM - 5 ( ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி மூலம் பெறுபவர்களுக்கு ) பூர்த்திச்செய்து ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
 

driving license 1



ஓட்டுநர் உரிமம் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் :


1.பழகுநர் உரிமம்.
2. வாகனம் மற்றும் அதற்கான ஆவணங்கள்.
3.பிறர் வாகனங்கள் என்றால் அவர்களின் ஒப்புதல் கடிதம்.
4. பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் நான்கு தேவை.

ஓட்டுநர் உரிமம் பெற கட்டணம் :
ஓட்டுநர் உரிமம் (Laminated Type) பெற கட்டணமாக ரூபாய் 250 செலுத்த வேண்டும்.

சேவை கட்டணம் :
1.தனி வாகனங்களுக்கு : ரூபாய் 50.
2. போக்குவரத்து வாகனங்களுக்கு : ரூபாய் 100.

கூடுதல் உரிமம் மேற்குறிப்பு (Endorsement ) 
சில வகை வாகனங்கள் மட்டும் வைத்துள்ளவர்கள் , மேலும் சில வகை வாகன ஓட்டும் உரிமம் கூடுதல் உரிம மேற்குறிப்பு பெறலாம். 

போக்குவரத்து வாகன உரிமம் பெற தேவையான ஆவணங்கள் : 

படிவம் - 8 ஐ பூர்த்து செய்து , அதனுடன் பின்வரும் ஆவணங்களையும் இணைக்க வேண்டும். 

1. ஓட்டுநர் உரிமம்.
2. வாகனம் மற்றும் அதற்கான ஆவணம்  , பிறர் வாகனம் என்றால் அவர்களின் ஒப்புதல் கடிதம்.
3. பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் நான்கு தேவை.
4. பொதுப்பணி வில்லை ( Public Service Badge ).
கட்டணம் - ரூபாய் 215 மற்றும் சேவைக்கட்டணம் - ரூபாய் 50.
போக்குவரத்து வாகனங்களை ஓட்டுபவர்கள் , பொதுப்பணி வில்லை கட்டாயம் பெற வேண்டும். பொதுப்பணி வில்லை பெற விரும்புபவர்கள் , 20 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.மேலும் உரிமம் வழங்கும் அதிகாரி முன் நேரில் ஆஜராக வேண்டும்.

 

driving license

கனரக வாகன உரிமம் பெறத்தேவையான ஆவணங்கள் : 

FORM - LTVA , FROM - I & Pa - வை பூர்த்திச்செய்து , அவற்றுடன் பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.

1.ஓட்டுநர் உரிமம்.
2.மருத்துவ சான்றிதழ்.
3.முதல் உதவி சான்றிதழ்.
இதற்கான கட்டணம் - ரூபாய் 215.

அபாயகரமான வாகன ஓட்டுநர் உரிமம் மேற்குறிப்பு :

அபாயகரமான மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை ஓட்ட , அதற்கான சிறப்பு ஓட்டுநர் உரிமம் மேற்குறிப்பு பெற வேண்டும். அதற்காக சில ஆவணங்களை இணைக்க வேண்டும்.

இணைக்க வேண்டிய ஆவணங்கள் : 

1.போக்குவரத்து வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமம்.
2.I.R.T (indian Road Transport) (அல்லது) அஙகீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்.
3. கோரிக்கை மனு கட்டணம் ரூபாய் - 250.

பன்னாட்டு ஓட்டுநர் அனுமதி : 

ஒரு வெளிநாட்டவரோ அல்லது வெளிநாட்டு வாழ் இந்தியரோ , வெளிநாட்டில் அவர் பெற்ற ஓட்டுநர் உரிமத்தை வைத்து , இந்தியாவில் எந்த வாகனங்களையும் ஓட்ட முடியாது. ஆனால் அவர் சேர்ந்த நாடானது 1949- ம் ஆண்டு ஜெனீவா ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டிருந்த நாடாக இருந்தால் மட்டும் , அவர் இந்தியாவில் குறிப்பிட்ட வாகனங்களை மட்டும் பன்னாட்டு ஓட்டுநர் அனுமதி காலம் முடியுறும் தேதி வரை ஓட்டலாம். இந்தியாவில் பெறும் பன்னாட்டு ஓட்டுநர் அனுமதி , ஓராண்டு காலம் வரை செல்லும் . இதே போல் பன்னாட்டு ஓட்டுநர் அனுமதியானது. வெளிநாட்டவருக்கோ அல்லது வெளிநாட்டு வாழ் இந்தியருக்கோ வழங்கப்படமாட்டாது. பிற நாடுகளுக்கு அடிக்கடி செல்வோர் , அங்குள்ள வாகனங்களை ஓட்ட பன்னாட்டு ஓட்டுநர் உரிமத்தை இங்கேயே பெறலாம். அதற்கு ஓட்டுநர் உரிமம் ஏற்கெனவே பெற்றவர்கள் , வட்டார போக்குவரத்து அலுவலரை அணுகிப்பெறலாம். 

பன்னாட்டு ஓட்டுநர் அனுமதி பெற தேவையான ஆவணங்கள் :

1.படிவம் - IDPL 1 - யை பூர்த்திச்செய்து , பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
2. ஓட்டுநர் உரிமம்.
3. பாஸ்போர்ட் .
4. விசா .
5.பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மூன்று தேவை.
இதற்கான கட்டணம் - ரூபாய். 500
சேவைக்கட்டணம் - ரூபாய் - 500.

ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல் :
ஐந்து ஆண்டுகள் முடிவடைந்த ஒருவர், (ஓட்டுநர் உரிமம் பெற்றவர்) நேரில் ஆஜராகி மறுபரிச்சோதனை  செய்ய வேண்டும்.

புதுப்பிக்கும் போது இணைக்க வேண்டிய ஆவணங்கள் : 
படிவம் - 9 , படிவம் - 1 , படிவம் - 1a -வை பூர்த்திச்செய்து , பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
1.ஓட்டுநர் உரிமம்.
2.வயது சான்றிதழ்.
3. பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மூன்று தேவை.
இதற்கான கட்டணம் - ரூ 20 (Laminated Type).புதுப்பித்தல் கட்டணம் (ஒவ்வொரு ஆண்டுக்கும்)ரூ 10.

ஓட்டுநர் உரிமம் நகல் (Duplicate Licence) : 

ஓட்டுநர் உரிமம் காணாமல் போனாலோ அல்லது திருடு போனாலோ மனுதாரர் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.  

இணைக்க வேண்டிய ஆவணங்கள் :
1.ஓட்டுநர் உரிமம்.
2. காவல்நிலைய சான்றிதழ் (FIR COPY).
3.பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
இதற்கான கட்டணம் ரூபாய் - 215. 

ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் செய்ய :
ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் செய்வதற்கு , கோரிக்கை மனுவுடன் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

இணைக்க வேண்டிய ஆவணங்கள் :

1.ஓட்டுநர் உரிமம்.
2.முகவரி சான்று.
இதற்கான கட்டணம் : ரூபாய். 200 மற்றும் சேவைக்கட்டணம் - ரூ.50. 

வாகனப்பதிவு: 
பெரும்பாலும் , வாகன விற்பனையாளர்களே தங்கள் ஏஜென்டுகள் மூலம் வாகனத்தைப் பதிவு செய்து கொடுத்து விடுவார்கள். வங்கி அல்லது பைனான்ஸ் நிறுவனத்தில் கடனுதவி பெற்று வாகனம் வாங்குபவர்கள் , கடன் கட்டி முடித்த பின் வங்கி அல்லது பைனான்ஸ் தடையில்லா சான்று பெற்று (NOC) , பதிவு சான்றிதழ் , இன்சூரன்ஸ் பாலிசியுடன் படிவம் - 35ஐ அதிகாரியிடம் சமர்பித்து  , பதிவு சான்றிதழில் அடமான நீக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.

வாகனம் விற்பனை : 

வாகனம் விற்பனை செய்யும் போது அல்லது பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்கும் போது , பதிவு சான்றிதழின் பதவு எண் , இயந்திர எண் , அடித்தள எண் உள்ளிட்டவை வாகனத்தில் ஒரு முறை சரிபார்த்து வாங்க வேண்டும். மேலும் படிவம் - 29 மற்றும் படிவம் - 30 ஐ பூர்த்திச்செய்து , அதில் விற்பவரின் கையொப்பத்துடன்  சமர்பித்து , உங்கள் பெயரில் மாற்றிக்கொள்ளலாம்.

மத்திய அரசு ஓட்டுநர் உரிமத்தை தொழில்நுட்ப வசதியுடன் "ஸ்மார்ட் கார்டு" வடிவில் வழங்கி வருகிறது. மேலும் ஓட்டுநர் உரிமம் தொடர்பான விவரங்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பான விவரங்களை இணையதள வழியில் அறியலாம். இதற்கான இணையதள முகவரி : https://parivahan.gov.in/parivahan/en/content/driving-licence-0 ஆகும் . அதே போல் ஓட்டுநர் உரிமம் (LICENCE STATUS) தொடர்பான விவரங்கள் அறிய இணையதள முகவரி : https://parivahan.gov.in/rcdlstatus/?pur_cd=101 மற்றும் வாகன விவரங்கள் (RC STATUS) அறிய இணைய தள முகவரி : https://parivahan.gov.in/rcdlstatus/?pur_cd=102 ஆகும்.


பி .சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்