கோவையில் பாஜக நிர்வாகியை ஓட்டல் பவுன்சர்கள் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் தனியார் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஓட்டலில் நடைபெறும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அந்த ஓட்டலுக்கு பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்சன் என்பவர் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து பாஜக நிர்வாகி ஜான்சனுக்கும் அந்த ஓட்டலில் பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்களுக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி பவுன்சர்கள் பாஜக நிர்வாகியை தாக்கினர். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிறது.
இந்த விவகாரத்தில் ஓட்டலின் பவுன்சர்கள் கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகாரின் பேரில் பாஜக சிறுபான்மை பிரிவு நிர்வாகி ஜான்சன் மற்றும் அவருடன் வந்த லட்சுமணன், டேவிட், ஜெரிஷ் ஆகிய நான்கு பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.