தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள், கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மாநிலப் பேரிடர் மீட்புக் குழு, தேசியப் பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத்துறை, காவல்துறையினர் மற்றும் அனைத்து அரசுத் துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதே சமயம் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. தற்போது பல இடங்களில் வெள்ள நீர் வடியத் துவங்கியுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (21.12.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. முகாம்கள் ஏதும் நடைபெறாத கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும். வெள்ளிக்கிழமை முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
முன்னதாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களால் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்கள் குறித்த விபரங்களை கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், ஆதார் எண் மற்றும் தங்களின் உரிய விபரங்களை அளிக்க வேண்டும். தேவையான ஆவணங்கள் இல்லாத பொதுமக்கள், புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் மூலம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளரிடம் தெரிவிக்கலாம். அரசின் கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப. கார்த்திகேயன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.