Skip to main content

தக்காளி இல்லாத சாம்பார், ரசம்...! – விண்ணைத் தொடும் விலையேற்றம்! 

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

high  tomato price

 

ஈரோடு பிரதான காய்கறி மார்க்கெட் நேதாஜி தினசரி சந்தை, வ.ஊ.சி. பூங்கா மைதானத்தில் இயங்கும் இந்த மார்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. இங்கு தினமும் சத்தியமங்கலம், தாளவாடி, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், கர்நாடக மாநிலம் கோலார், ஆந்திரா போன்ற பகுதிகளிலிருந்து காய்கறிகள் பெருமளவு விற்பனைக்காக வருகின்றன. சமீபகாலமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக பல்வேறு காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. 

 

இதனால் மக்கள் மிகுந்த சிரமமடைந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டதால் தொடர்ந்து வரத்து குறைவாக வருவதால் இதன் எதிரொலியாக நாளுக்கு நாள் காய்கறி விலை உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனையானது. சென்ற வாரம் ரூபாய் 70 முதல் 80 வரை விற்பனையானது. கடந்த சில நாட்களாக சத்தியமங்கலம், தாளவாடி பகுதியில் தக்காளி விளைச்சல் குறைந்து போனதால் மார்கெட்டுக்கு தக்காளி வரவில்லை. தற்போது மார்க்கெட்டுக்கு ஆந்திராவிலிருந்து மட்டும் இருந்து தக்காளி வரத்தாகி வருகிறது. 

 

தினமும் 15 டன் தக்காளி வரத்தாகி வந்த இங்கு இப்போது வெறும் 4 டன் தக்காளி மட்டுமே வரத்தாகி வருகிறது. இதனால் 21ந் தேதி மார்க்கெட்டில் தக்காளி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூபாய் 100-க்கு விற்பனையானது. இதுவே சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ 120க்கு விற்பனையாகிறது.  இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல் தக்காளி வரத்து குறைந்ததன் எதிரொலியாக ஒரு கிலோ தக்காளி ரூபாய் 130 வரை விற்பனையானது. பின்னர் அரசு விலையை குறைக்க பல்வேறு கட்ட முயற்சிகள் எடுத்தது. பின்னர் தக்காளி விலை கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இன்று நூறு ரூபாய்க்கு தக்காளி விற்பனையாகி வருகிறது. சுமாராக இருக்கும் தக்காளி ஒரு கிலோ ரூபாய் 90-க்கும், நல்ல தக்காளி ஒரு கிலோ ரூபாய் 100-க்கும் விற்கப்பட்டு வருகிறது. இன்னும் சில நாள்களுக்கு இதே நிலைமைதான் நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் ஈரோடு சிந்தாமணி கூட்டுறவு அங்காடிகளில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 72க்கு விற்பனையானது. அது மேலும் அதிகரித்து ஒரு கிலோ தக்காளி ரூபாய் 90க்கு விற்பனையாகி வருகிறது.

 

இப்படி விலை உயர்ந்து போனதால் இப்போதெல்லாம் இல்லத்தரசிகள் சாம்பாருக்கும், ரசத்திற்கும் தக்காளி போடுவதில்லையாம்..

 

 

சார்ந்த செய்திகள்