Skip to main content

''கமிஷனுக்காகத்தான் எட்டு வழிச்சாலை போடுகிறார் எடப்பாடி!"; முத்தரசன் காட்டம்

Published on 04/07/2018 | Edited on 04/07/2018
mutharasan


கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கமிஷன் பெறுவதற்காகவே எடப்பாடி பழனிசாமி எட்டு வழிச்சாலையைப் போடுகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் இன்று (ஜூலை 4, 2018) செய்தியாளர்களிடம் கூறியது:சென்னைக்கும் சேலத்திற்கும் விரைவாக செல்லும் வகையில், மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து கொண்டு எட்டு வழிச்சாலை என்ற பெயரில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளின் நிலங்களை அபகரித்து வருகின்றன. 10 ஆயிரம் கோடி ரூபாயில் இந்த திட்டத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர்.


இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக பாதிக்கப்படும் விவசாயிகள், பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டிருக்க வேண்டும். அல்லது, அதன்பிறகாவது மக்கள் கூறும் கருத்துகளுக்கு செவி மடுத்திருக்க வேண்டும். இந்த இரண்டையுமே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பின்பற்றவில்லை. இந்த அரசு மிகக்கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டு, விவசாயிகளையும் பெண்களையும் அச்சுறுத்தி விளை நிலங்களை கையகப்படுத்தி முட்டுக்கல் ஊன்றும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.


சில இடங்களில் முட்டுக்கற்களை பெண்களே முன்னின்று அவற்றை பிடுங்கி எறிவதையும் காண முடிகிறது. விவசாயத்தை அழிக்கும் இந்த எட்டு வழிச்சாலைத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றோம். 


இந்தத் திட்டத்தை அரசு உடனடியாக கைவிடவில்லை என்று சொன்னால் 5 மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றுதிரட்டி தொடர்ந்து போராட்டங்கள் மேற்கொள்ளப்படும்.


முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையிலும் சரி... வெளியிலும் சரி... பொய் பேசுகிறார். இதுவரை ஒரு விவசாயிகள்கூட கைது செய்யப்படவில்லை என்று கூறுகிறார். ஆனால் நேற்றுகூட விவசாயிகளும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர். 


பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், பின்னர் அவர்கள் ஜாமினில் விடுதலை செய்யப்படுவதும் தொடர்கிறது. 90 சதவீத விவசாயிகள்¢ தாமாகவே முன்வந்து நிலத்தை கொடுத்து விட்டார்கள் என்று முதல்வர் கூறுவது அப்பட்டமான பொய்.


எட்டு வழிச்சாலை திட்டத்தால் ஏழெட்டு மலைகளும் பாதிக்கப்படுகிறது. இந்த மலைகளை உடைத்து அதில் இருக்கிற விலைமதிக்க முடியாத கனிம வளங்களை கொள்ளை அடிப்பதற்காகத்தான் இந்த சாலையே போடப்படுகிறது என்பதை பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கிறோம். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து கமிஷன் வாங்குவதற்காகத்தான் இந்த சாலையை போடுகின்றனர். இது மக்களுக்கான திட்டம் அல்ல.இவ்வாறு முத்தரசன் கூறினார்.


முன்னதாக எட்டு வழிச்சாலைத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் முத்தரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள், எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

இதையடுத்து இன்று மாலை 4 மணியளவில் பாரப்பட்டி, நாழிக்கல்பட்டி, வெடிகாரன்புதூர், எருமாபாளையம், சீரிக்காடு, குப்பனூர் ஆகிய கிராமங்களில் எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளிடம் முத்தரசன் நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். 

 

அப்போது விவசாயிகளிடம் அவர் பேசுகையில், ''வழக்கமான போராட்டங்கள் மட்டுமின்றி சட்ட ரீதியாக போராடுவோம். காவல்துறையினரும் மனுஷங்கதான். காவல்துறையினரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்டிப்படைக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதெல்லாம் நிரந்தரம் அல்ல என்பதை உணர வேண்டும். தேர்தல் வரும். அப்போது அவர் தூக்கியடிக்கப்படுவார். காலம் மாறும்,'' என்றார்.


 

சார்ந்த செய்திகள்