Skip to main content

சேலம் பெரியார் பல்கலை முன்னாள் இயக்குநர் குணசேகரனுக்கு நிபந்தனை முன் ஜாமீன்

Published on 24/02/2018 | Edited on 24/02/2018
high

 

சேலம் பெரியார் பல்லைக்கழக தொலைதூர இயக்குநரகத்தின் மூலம் நடத்தப்படும் படிப்புகளில்,  கொல்கத்தாவை சேர்ந்த சரோஜ்குமார் மஜூம் என்பவர் படிப்பை முடித்து சான்றிதழை கேட்டபோது, கட்டணம் ஏதும் செலுத்தாததால் சான்றிதழ் தர மறுத்துள்ளனர். இதுதொடர்பாக கட்டணம் வசூலிப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார். 

 

அந்த புகார் குறித்து கடந்த 2016 ஆம் ஆண்டு சேலம் லஞ்ச ஒழிப்பு துறை  விசாரணை நடத்தியதில், தொலைதூர கல்வி மையத்தில் மாணவர்கள் செலுத்திய கட்டணத்தில் நாடு முழுவதும் 8 கோடி ரூபாய் வரை மோசடி நடந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, தொலை தூர கல்வி மைய முன்னாள் இயக்குநர் டாக்டர் குணசேகரன், தமிழ்த்துறை தலைவர் டாக்டர் மாதையன், முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் டாக்டர் பிரின்ஸ் தன்ராஜ், கொல்கத்தாவில் இயங்கும் பெரியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயந்த் முகர்ஜி ஆகிய நான்கு பேர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர்.

 

இந்த வழக்கில், தொலைதூர கல்வி இயக்குநரகத்தின் முன்னாள் இயக்குநர்  குணசேகரன், தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் முனைவர் மாதையன் ஆகியோர்  முன் ஜாமின் கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தனர்.

 

இந்த மனுவை   நீதிபதி ஏ.டி.ஜெகதிஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது  சேலத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறை அலுவலகத்தில் தினமும் காலை கையெழுத்திட வேண்டும் என்ற  நிபந்தனையுடன் இரண்டு பேருக்கும் முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒன்றிய அமைச்சரவை இலாகாக்கள் மாற்றம்!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Change of Union Cabinet portfolios

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது.

அதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதே போல்,  கடந்த 4ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், ஸோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. 

இந்த தேர்தல்களில் மத்திய அமைச்சராக இருந்த சிலரும், எம்.பி.க்கள் சிலரும் போட்டியிட்டனர். அதில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், நீர்வளத்துறை இணை அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேல் உட்பட 10 எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், நரேந்திரசிங் தோமர் மற்றும் பிரகலாத்சிங் பட்டேல் ஆகியோர் மத்திய பிரதேச சட்டசபைக்கு எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒரு மாநிலத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகிக்க முடியாத காரணத்தினால், பா.ஜ.க மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 

அதில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரானது வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விவாதத்தில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். இதனையடுத்து, நேற்று முன் தினம் (06-12-23) நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பிரகலாத்சிங் பட்டேல் மற்றும் ரேணுகா சிங் சரூடா ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு வந்து தங்களது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தனர். இதனையடுத்து, அவர்கள் அளித்த ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரெளபதி முர்மு ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி மாளிகை நேற்று (07-12-23) அறிக்கை வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில், அவர்கள் வகித்து வந்த துறைகளை, 4 அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்புகளாக ஒதுக்கப்பட்டுள்ளது.  அதன்படி, பழங்குடி நலத்துறை மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா, வேளாண்துறைக்கு கூடுதல் பொறுப்பு வகிப்பார். மேலும், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழிநுட்ப மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் , ஜல்சக்தி துறை இணை அமைச்சராக கூடுதல் பொறுப்பு வகிப்பார். அதே போல், வேளாண்துறை இணை அமைச்சர் சோபா சுரண்டலேவுக்கு, உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் பொறுப்பையும், சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவாருக்கு, பழங்குடி நலத்துறை இணை அமைச்சர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களை ஜனாதிபதி செய்திருப்பதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பெரியார் பல்கலை மீதான ஊழல் புகார்; இரு நபர் குழு இன்று விசாரணை!

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

Visit of the committee to inquire into the complaint against Salem Periyar University

 

பெரியார் பல்கலையில் பணி நியமனங்களில் நடந்த ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்கள் மீது இரு நபர் குழுவினர்  வியாழக்கிழமை (ஏப். 27, 2023) விசாரணை நடத்துகின்றனர். சேலம் பெரியார் பல்கலையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார்கள் கிளம்பின. 

 

இது குறித்து விசாரிக்க, உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிசாமி, இணை செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் கொண்ட இரு நபர் விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்தது. பெரியார் பல்கலை மீது பணி நியமன ஊழல் மட்டுமின்றி பதவி உயர்வு, உறுப்புக் கல்லூரி தொடங்குதல், விடைத்தாள் கொள்முதல், கணினிமயமாக்கல், தொலைதூர கல்வி மையங்களுக்கு அனுமதி வழங்குதல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல் உள்ளிட்ட 13 பிரிவுகளில் ஊழல் புகார்கள் கூறப்பட்டுள்ளன. இவை குறித்து முழுமையாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த ஜன. 30ம் தேதி இக்குழுவினர் முதன்முதலில் விசாரணைக்கு வந்தபோது, பல்கலையில் இருந்து சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர். அடுத்த கட்டமாக, கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி, புகாரில் தொடர்புடைய சிலரிடம் விசாரணை நடந்தது.

 

இதையடுத்து, இரு நபர் குழு மீண்டும் இன்று (ஏப். 27, 2023) பெரியார் பல்கலையில் விசாரணை நடத்துகிறது. முறைகேடு தொடர்பாக புகார் அளித்த பாமக எம்எல்ஏ அருள், பெரியார் பல்கலை பொருளியல் துறை உதவி பேராசிரியர் வைத்தியநாதன்,  தொழிலாளர் சங்கத் தலைவர் கனிவண்ணன், ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த முத்துக்கண்ணன், அம்பேத்கர் மக்கள் இயக்க மாநிலத்  தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை, அம்பேத்கர் கல்வி இயக்க நிறுவனர் செந்தில்குமார், எஸ்எப்ஐ தலைவர் கண்ணன் ஆகிய 7 பேரிடம் இன்று விசாரணை நடத்தப்படுகிறது. இவர்கள் அனைவரும் இருநபர் குழுவின் முன்பு விசாரணைக்கு ஆஜராகும்படி ஏற்கனவே அழைப்பாணை அனுப்பப்பட்டு உள்ளது. இவர்கள்  தங்கள் தரப்பு விளக்கங்களை எழுத்து மூலம் அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஊழல் தொடர்பான ஆதாரங்கள் இருந்தாலும் சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.