Skip to main content

குபேர கிரிவலம் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை... யாரும் வரவேண்டாம் என அறிவுறுத்தல்...

Published on 12/12/2020 | Edited on 12/12/2020

 

Gubera girivalam district administration asked public to dont visit


திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் கிரிவலம் உலகப் பிரசித்தம். லட்சக் கணக்கான பக்தர்கள் 14 கி.மீ மலையை அண்ணாமலையாராக நினைத்து வலம் வருவார்கள். பௌர்ணமி மட்டுமல்லாமல் புதிய வருடப்பிறப்பு, மாதப்பிறப்பு, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என பக்தர்கள் வலம் வருவர்.
 

தற்போது வாரத்தில் ஏழு நாட்களும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வலம் வருகிறார்கள். இந்நிலையில், திருவண்ணாமலையில் திடீரென 'குபேர' கிரிவலம் என்பது பிரபலமாகிவருகிறது. கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்கங்கள் என்கிற பெயரில் 8 லிங்கங்கள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு லிங்கமென பக்தர்கள் வணங்குவார்கள். ஆனால், குபேர லிங்கத்தை மட்டும் அனைவரும் வணங்குவார்கள். அதற்குக் காரணம், குபேர லிங்கத்தை வணங்கினால் வீட்டில், தொழிலில் செல்வம் பெருகும் என்கிற நம்பிக்கையே. அதனால், எப்போதும் அந்த லிங்கக் கோவிலில் கூட்டமிருக்கும்.


இந்நிலையில் தான், குபேர கிரிவலம் வந்தால், குபேரனாகலாம் என்கிற பிரச்சாரத்தை ஆன்மிக அமைப்புகள் சில தொடங்கியுள்ளன. அவர்கள் கூறுவது, ஒவ்வொரு தமிழ் வருடமும், கார்த்திகை மாதம் வரும் சிவராத்திரி அன்று, வானுலகிலிருந்து செல்வத்தின் அதிபதியான குபேர பகவான் பூமிக்கு வருகிறார். அவர் திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் 7 வது லிங்கமான குபேர லிங்கத்துக்கு தினப்பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 முதல் 6.00 வரை) பூஜை செய்கிறார். அப்படி பூஜை செய்துவிட்டு, இரவு 7 மணியளவில் குபேர பகவானே கிரிவலம் செல்கிறார். அதே நாளில் நாமும் கிரிவலம் சென்றால், நமக்கு அண்ணாமலையின் அருளும், சித்தர்களின், குபேரனது அருளும் கிடைக்கும். இதன் மூலம் நாம், நமது முன்னோர்கள் செய்த பாவங்கள் தீரும். நாம், நமது அடுத்த ஏழு தலைமுறையும் நிம்மதியாகவும், செல்வச்செழிப்புடனும் இருக்கும் எனப் பிரச்சாரம் செய்துள்ளார்கள்.

 

Gubera girivalam district administration asked public to dont visit

 

அதோடு, குபேரன் விண்ணில் இருந்து மண்ணுக்கு வருகிறார். அவருடன் சேர்ந்து குபேர லிங்கத்தை வணங்கி அவருடன் சேர்ந்து கிரிவலம் சென்றால், அடுத்த ஒரு வருடத்திற்கு நமது வருமானம் நியாயமான விதத்தில் அதிகரிக்கும். இந்த ஒரு மணி நேரத்தில் குபேர லிங்கத்தை, தரிசிக்க இயலாவிட்டால், வருத்தப்பட வேண்டாம், மானசீகமாக குபேர லிங்கம் இருக்கும் இடத்தை நோக்கி வேண்டிக்கொண்டால் போதும், இரவு 7 மணி ஆனதும் குபேர லிங்கத்தில் இருந்து புறப்பட்டு குபேர லிங்கத்தில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும். கிரிவலம் முடித்ததும் வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும், பிறர் வீடுகளுக்குச் செல்லாமலும் நேராக அவரவர் வீடு திரும்ப வேண்டும். கிரிவலம் முடிந்து அன்று இரவு கண்டிப்பாக அண்ணாமலையில் தங்க வேண்டும் என்பது ஐதீகம். தங்கி, மறு நாள் வேறு எங்கும் செல்லாமல் அவரவர் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத சம்பிரதாயம். அப்படிச் செய்தால் மட்டுமே குபேர கிரிவலத்தின் பலன் நமக்குக் கிடைக்கும் எனப் பிரச்சாரம் செய்கின்றனர். இதனால் அந்த நாட்களில் கடந்த 5 வருடங்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

 

இந்த ஆண்டு குபேர கிரிவலம் டிசம்பர் 13ஆம் தேதி என இந்து அமைப்புகள் சில தகவல் வெளியிட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் திருவண்ணாமலை நோக்கி வந்துவிடுமென யூகித்த மாவட்டம் நிர்வாகம், டிசம்பர் 13ஆம் தேதி, கிரிவலம் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா காலம் என்பதாலும்  தடை காலம் தொடர்வதாலும் கிரிவலம் வர அனுமதியில்லை. அதனால், குபேர கிரிவலம் வர யாரும் முயற்சிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
 

சாஸ்திரத்தில் குபேர கிரிவலம் என்ற ஒன்று கிடையாது. யாரோ தங்களது சுயநலத்துக்காக ஒரு கதையைத் தயார் செய்து பிரச்சாரம் செய்கிறார்கள் என்கிறார்கள் கோவில் நிர்வாகத்தினர். சில குருக்களும் அதை ஆமோதிக்கின்றனர். ஆனால் அதை வெளிப்படையாக அறிவிக்க மறுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்