Skip to main content

வெட்டவெளி மது விருந்தில் பெண்களோடு பெரும் தலைகள்! -விருதுநகரைக் கலக்கும் வீடியோ!

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

‘சாலையோரத்தில் மதுபோதையில் மயங்கிக் கிடக்கும் குடிமகன்களை நாம் கடந்து சென்றிருப்போம். இவர்களெல்லாம் சாதா ரகம். குடிமகன்களில்  ‘ஸ்பெஷல் ரகம்’ எப்படி இருப்பார்கள் தெரியுமா? இந்த வீடியோவை பாருங்கள்!’ என்று நமக்கு அனுப்பியிருந்தார் விருதுநகரைச் சேர்ந்த நண்பர் ஒருவர். அந்த வீடியோ, பெரிய மனிதர்களின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்தின.  

விருதுநகரில் அவரை ‘பிக்சாட்’ என்பார்கள். அவருடைய பணத்தில் சில லட்சங்களைச் செலவழித்து அந்தத் தனியார் பருப்பு மில்லில் ‘பார்ட்டி’ நடத்தினார்கள். அந்த ஊரில் வரலாற்று பின்னணி கொண்ட கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் பள்ளின் ஒன்றின் செயலாளரைக் குற்றம்சாட்டி வெளியேற்றியதைக் கொண்டாடும் விதத்தில்,  ஊரிலுள்ள பெரிய மனிதர்களையெல்லாம் அழைத்து  ‘மச்சி.. ஓபன் த பாட்டில்..’ என்று கொண்டாடினார்கள். விஐபிக்களாயிற்றே! சரக்கும் சைட் டிஷ்ஷும் போதுமா? தனியே மேடை அமைத்து, இளம்பெண்களை  ‘ரிக்கார்ட் டான்ஸ்’ ஆடவிட்டு ரசித்தார்கள். தள்ளாட்டத்துடன் பெரிய மனிதர்களும் அவ்வப்போது மேடையேறி மைக் பிடித்து பாடுவதும் ஆடுவதுமாக இருந்தார்கள்.

 

Great heads up with women at a wine party! Video of the city


ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் தேவஸ்தான முன்னாள் பொருளாளர் உற்சாக மிகுதியில், ‘போதை வந்தபோது புத்தியில்லியே.. புத்திவந்தபோது நண்பன் இல்லியே..’ என்ற பாடலுக்கு ஆடியபோது, “என்னோட நாலு நண்பர்களும் போயிட்டாங்க.” என்று ஃபீல் பண்ணிவிட்டு,  “அதெல்லாம் மறக்க முடியாத நட்பு.. அவங்கள்லாம் போயிட்டாங்களே.. அதனால.. வாழ்க்கைல இன்னைக்கு வரைக்கும் நெகடிவ் தாட்ஸ்தான் வருது. என்னோட கவலைகள்ல பங்கெடுத்துக்க இப்ப அவங்க இல்ல. ரொம்ப ஃபீல் பண்றேன். தினமும் ஃபீல் பண்றேன். அவன்தான் என்னை மொதமொதல்ல குடிக்க வச்சான். அந்த பாவம், புண்ணியமெல்லாம் அவனைத்தான் சேரும்.” என்று புலம்பியபடி ஆட்டத்தைத் தொடர்ந்தார்.

திடீரென்று ஒருவரைச் சூழ்ந்துகொண்டு “பொதுவாக மு... அண்ணன் தங்கம். ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்.” என்று குஷியாகப் பாடி வாழ்த்தினார்கள். அவரும் பெருமிதத்துடன் குடிமகன்களின் வாழ்த்தினை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து சினிமாக்களில் ஹீரோ மது அருந்தும் காட்சிகளில் வரும் பாடல்களைப் பாடி ஆடினார்கள். சிவாஜியின் ‘ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்..’ தொடங்கி ரஜினியின் ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல..’ வரையிலான பாடல்கள்,  அவர்களைத் தொடர்ந்து உற்சாக மூடிலேயே வைத்திருந்தன.

தேவஸ்தானம் போர்டில் உள்ளவர்கள், அந்த ஊரின் பிரபலமான பொறியியல் கல்லூரியில் அங்கம் வகிப்பவர்கள், 1940 வரையிலும் உயர் கல்வி என்பது ஏழை மக்களுக்குத் தொலைதூர கனவாக இருந்ததென்று, சமுதாய பெரியோர்களால் தொடங்கப்பட்டு, சமுதாய சங்கத்தினர் நடத்துகின்ற பழமை வாய்ந்த கலைக்கல்லூரியின் நிர்வாகிகள், வீடு வீடாகச் சென்று அரிசி பெற்று கல்வி அறக்கட்டளையைத் தொடங்கி, கல்விச்சேவையில் தமிழகத்துக்கே முன்னோடியாகத் திகழும் வரலாற்று பின்னணி கொண்ட பள்ளியின் நிர்வாகிகள் என,  அந்தப் பார்ட்டியில் கலந்துகொண்ட பல தலைகளை நமக்கு அடையாளம் காட்டினார் அந்த நண்பர்.    

 

Great heads up with women at a wine party! Video of the city

 

பார்ட்டி நடந்த இடத்தில் ஒலித்த ‘பொறந்த ஊருக்கு புகழைச் சேரு.. வளர்ந்த நாட்டுக்குப் பெருமை தேடு..’ என்று ரஜினியின் முரட்டுக்காளை பாடலில் வரும் வரியை, கலைக்கல்லூரியின் செயலாளரிடமும்,  பள்ளியின் செயலாளரிடமும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டி, ‘பெருமை வாய்ந்த கல்வி நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருந்துகொண்டு, இதுபோன்ற திறந்தவெளி மது விருந்துகளில் கலந்துகொண்டு, விருதுநகருக்கு என்ன புகழைச் சேர்த்தீர்கள்? இந்திய நாட்டுக்கு என்ன பெருமை தேடினீர்கள்?’ என்று கேட்டோம்.  

“அது தனிப்பட்ட முறையில் நடந்த பார்ட்டி. அதில் நாங்கள் கலந்துகொண்டது உண்மைதான். எப்போதாவது இதுபோன்ற பார்ட்டிகள் விருதுநகரில் நடக்கும்.  எங்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அங்கு நடந்ததை வீடியோ எடுத்திருக்கிறார்கள். மற்றபடி, பள்ளியின் செயலாளர் ஒருவரை விரட்டிவிட்டு, அதற்காகக் கொண்டாடிய பார்ட்டி என்று கூறுவதெல்லாம் பொய்.” என்றனர்.

சமுதாய பிரமுகர் ஒருவர் நம்மைத் தொடர்புகொண்டு “நிர்வாகிகள் மது அருந்தியது, மேடையில் பெண்கள் ஆடியதெல்லாம் கல்லூரியிலோ, பள்ளியிலோ கிடையாது. ஊரில் பலகோடி பெறுமான பொதுச்சொத்தை ஒரு சிலர் அமுக்கிவிட்டார்கள். அதை மீட்பதற்காகப் போராட வேண்டியதிருக்கிறது. சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டு, மது அருந்திய சின்ன விஷயத்தைப் பெரிதுபடுத்தி, வீடியோ எடுத்து அசிங்கப்படுத்திவிட்டார்கள்.” என்றார்.  

பலவீனம் நிறைந்த அந்தப் பெரிய மனிதர்களுக்காக, பார்ட்டியில் ஒலிக்காத பாடல் ஒன்றின் முதல் வரி -  

‘அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா..’ 

 

 

 

சார்ந்த செய்திகள்