Skip to main content

கிரானைட் வியாபாரி வீட்டில் 9 லட்சம் ரூபாய் திருட்டு; மர்ம நபர்கள் கைவரிசை

Published on 29/07/2022 | Edited on 29/07/2022

 

granite businessman home money incident cctv footage police investigation

 

சேலத்தில், கிரானைட் வியாபாரி வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து 9 லட்சம் ரூபாயை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் நெய்க்காரப்பட்டி ஏரிக்காட்டைச் சேர்ந்தவர் செல்வம் (57). கிரானைட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மூத்த மகன் பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். 

 

அவரை பார்ப்பதற்காக செல்வத்தின் மனைவியும், அவருடைய இரண்டாவது மகனும் சென்றிருந்தனர். வீட்டை பூட்டிவிட்டு செல்வம் தான் நடத்தி வரும் கிரானைட் கடைக்குச் சென்றுவிட்டார். 

 

பணி முடிந்து இரவு வீடு திரும்பிய செல்வம், வாயில் கதவின் பூட்டு திறக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த 9 லட்சம் ரூபாய் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. 

 

இதுகுறித்து அவர் கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் ஜெகநாதன் மற்றும் காவலர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தடய அறிவியல் நிபுணர்கள் மூலம் விரல் ரேகை பதிவு உள்ளிட்ட தடயங்களை பதிவு செய்தனர். 

 

வீட்டின் வாயில் கதவு பூட்டு உடைக்கப்படாமல் திறக்கப்பட்டு இருந்ததால் கள்ளச்சாவி மூலம் மர்ம நபர்கள் திறந்து உள்ளே சென்றார்களா? அல்லது புகார்தாரரே ஏதேனும் நாடகமாடுகிறாரா? என பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

மேலும், நிகழ்விட பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்