Skip to main content

“மசோதாக்களை இழுத்தடிக்க ஆளுநர் முயற்சி” - அமைச்சர் ரகுபதி

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Governor's attempt to drag bills Minister Raghupathi

 

தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி தமிழக அரசு சார்பில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு உச்சநீதிமன்றம் கண்டனங்களையும் வருத்தத்தையும் தெரிவித்து சரமாரி கேள்விகளையும் எழுப்பி இருந்தது.

 

இந்த சூழலில் ஆளுநர் ஆர்.என். ரவி 10க்கும் மேற்பட்ட மசோதாக்களைத் திருப்பி அனுப்பியிருந்த நிலையில், அண்மையில் கூடிய தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு இந்த தீர்மானங்கள் மீண்டும் அனுப்பப்பட்டது. இதையடுத்து இந்த 10 தீர்மானங்களைக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என். ரவி அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

 

இந்நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இது குறித்துப் பேசுகையில், “ஆளுநர் ஆர்.என். ரவி இந்த காரணங்களுக்காக இந்த 10 மசோதாக்களைத் திருப்பி அனுப்பியிருக்கிறேன் என்று குறிப்பிட்டு அனுப்பி இருந்ததால், அதற்கு அரசு சார்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டிருக்கும். ஆனால் எவ்வித காரணமும் குறிப்பிடாமல் அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி திருப்பி அனுப்பி உள்ளோம்.

 

Governor's attempt to drag bills Minister Raghupathi
கோப்புப்படம்

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட இந்த 10 மசோதாக்களுக்கு ஆளுநர்தான் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி ஒரு செய்தியை தெரிவித்துள்ளது மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிக்கும் முயற்சியாகும். ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில், தன்னிடம் இருக்கும் அதிகாரம் பறிபோய் விடக்கூடாது என்ற அச்சத்தில் ஆளுநர் செயல்படுகிறார்.

 

மாநில அரசுக்கு துணைவேந்தரை நியமிக்கக்கூட அதிகாரம் இருக்கக்கூடாது என நினைப்பது எந்த அடிப்படையில் நியாயம் என்று புரியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் ஆகியோர் ஒரு குழுவை நியமிக்கிறோம். அதில் ஆளுநரின் பிரதிநிதியும் இருக்கிறார், அரசின் பிரதிநிதியும் இருக்கிறார். பல்கலைக்கழக சிண்டிகேட் பிரதிநிதியும் இருக்கிறார். அந்த தேடுதல் குழுதான் 3 பேரை பரிந்துரை செய்கிறது. அதில் ஒருவரை ஆளுநர் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆளுநர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு பதிலாக மாநில அரசாங்கம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. ஜனநாயகம் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த மசோதாக்களை அனுப்பி இருக்கிறோம்" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்