Skip to main content

"நீட் விலக்கு சட்டமுன் வடிவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு! 

Published on 04/05/2022 | Edited on 04/05/2022

 

"The Governor has sent the draft of the NEET Exemption Bill to the Union Home Ministry" - Chief Minister MK Stalin's speech!

 

நீட் விலக்கு சட்டமுன் வடிவு குறித்து இன்று (04/05/2022) தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து வரும் நீட் தேர்வில் இருந்து நமது மாணவர்களுக்கு விலக்குப் பெற வேண்டும் என்பதற்காக, இந்த அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகள் பற்றி நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். இதன் முதல் படியாக, நாம் அனைவரும் இணைந்து, இந்த மாமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு தொடர்பான, சட்டமுன் வடிவை, தமிழக ஆளுநர் மறுபரிசீலனை செய்யுமாறு கோரியதும், அது குறித்து அனைத்துக் கட்சி சட்டமன்றத்தைக் கூட்டி விரிவாக விவாதித்து, சில தினங்களுக்குள்ளாகவே குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கு ஏதுவாக, ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைத்தோம். 

 

இது தொடர்பாக, ஆளுநரை நான் நேரில் சந்தித்து, மேலும் தாமதமின்றி சட்டமுன் வடிவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் சந்தித்து, இந்த சட்டமுன் வடிவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அனைத்து கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், இது குறித்து குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் மனுவும் அளித்திருக்கிறார்கள். 

 

இந்த தொடர் முயற்சிகளின் பயனாக, ஒரு வரலாற்று நிகழ்வாக நாம் சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த, நீட் விலக்கு சட்டமுன் வடிவினை ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக, ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார் என்ற தகவலை ஆளுநரின் செயலர் சில மணித் துளிகளுக்கு முன்பாக, என்னிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார் என்பதை இந்த அவையில் மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

 

நீட் விலக்கு தொடர்பான, நமது போராட்டத்தின் அடுத்த கட்டமாக ஒன்றிய அரசை வலியுறுத்தி, இந்த சட்டமுன் வடிவிற்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்