கஜா புயலால் புரட்டி போடப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் போதிய அளவில் நெல் விளைந்த போதிலும் தமிழக அரசு கொள்முதல் செய்வதில் தாமதித்ததால் பொது விநியோகத் திட்டத்திற்கு அரிசி வெளிமாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்ய வேண்டிய பரிதாப நிலை ஏற்படப்போகிறது.
"தமிழகத்தின் உணவுத் தேவையில் 70 சதவிகிதத்தை பூர்த்தி செய்வது டெல்டா மாவட்டங்களில் விளையும் நெல்தான். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தை சேர்ந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்டு அதை பாதுகாப்பான இடங்களில் அடுக்கிவைக்கப்பட்டு பிறகு தேவையான போது அறவைக்கு அனுப்பி பொதுவினியோக கிடங்குக்கு அனுப்புவது வழக்கம்.
டெல்டா பகுதிகளில் விளைச்சல் நன்றாக இருக்கும் காலங்களில் ஏறத்தாழ 20 லட்சம் டன் கொள்முதல் செய்யப்படும். ஆனால் காவிரியில் நீர் வரத்து குறைவு, மழை பற்றாக்குறை, இடு பொருள் பற்றாக்குறை, ஆட்கள் பற்றாக்குறை என பல்வேறு காரணங்களால் சில ஆண்டுகளாக சாகுபடியின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் நெல் உற்பத்தியும் குறைந்துவிட்டது."என்கிறார்கள் விவசாயிகள்.
" 2017 -18 ஆம் ஆண்டுகளில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் மூன்று லட்சத்து 18 ஆயிரம் 148 டன்னும். திருவாரூர் மாவட்டத்தில் 5 லட்சம் டன்னும். நாகை மாவட்டத்தில் இரண்டு லட்சத்து 47 ஆயிரத்து 694 டன்னும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் நடப்பாண்டில் தஞ்சை மாவட்டத்தில் 4 இலட்சத்து 45 ஆயிரத்து 76 டன்னும். திருவாரூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 42 ஆயிரம் டன்னும், நாகை மாவட்டத்தில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 260 டன்னும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளைவிட சற்று கூடுதல் என்றாலும் இயல்பான அளவுடன் ஒப்பிடும்போது மிக மிக குறைவு.உற்பத்தி நிலத்தின் அளவு ஒருபுறம் குறைந்தாலும் எஞ்சிய நெல்லை கொள்முதல் செய்வதில் காலதாமதிப்பதே குறைவுக்கு காரணம் கொள்முதல் குறைவாக இருப்பதால் வரும் காலங்களில் பொது வினியோகத் திட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்படப்போகிறது" .என்கிறார்கள் அதிகாரிகள்.
இதுகுறித்து விவசாய சங்கத்தலைவர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம், " பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் இப்போதுள்ள இருப்பை வைத்து இரண்டு மாதங்களுக்கு கூட சமாளிக்க முடியாது. பிறகு ரேஷன் அரிசியின் தட்டுப்பாடு ஏற்படும் நிலையே உள்ளது. அதனால் வெளி மாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட வேண்டிய நிலையே ஏற்படும். இதனை வருங்காலங்களில் போக்கிட ஒரே வழி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விளைகின்ற நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யவேண்டும். அறுவடைக்கு முன்பே கொள்முதல் நிலையங்களை திறக்கவேண்டும்.
ஆனால் நமது அரசாங்கமோ கொள்முதல் சிஸ்டத்தையே மாற்றிவிட்டது. மிகவும் தாமதமாக, கடமைக்கு திறக்கின்றனர். அப்படி திறந்து கொள்முதல் செய்த மிச்ச நெல்லை சரியாக சேமித்து வைக்க போதுமான வசதிகள் கிடையாது. திறந்த வெளியில் நெல்லை அடுக்கிவைப்பதால் எடை குறைவும், தரம் குறைவும் ஏற்பட்டுவிடுகிறது. எப்போதுமே கடந்த காலங்களில் கொள்முதல் செய்தவதற்கான சாக்கு, மரங்கள், கருங்கள்ளை மூன்று மாதங்களுக்கு முன்பே ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிடுவார்கள் ஆனால் இந்த ஆண்டோ நெல் கொள்முதல் செய்யவதில் அரசு அக்கறை எடுத்துக் கொள்ளவே இல்லை. தேர்தலும் இதற்கு முக்கிய காரணம்.
கொள்முதலுக்கான சாக்குகள் டெண்டர் காலதாமதமாக விடப்பட்டதால் பழைய சாக்குகளைக் கொண்டே நெல்லை பிடித்து வைக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் அதிக அளவில் நெல் சேதமடைந்தது, அதோடு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கொடுனுக்கோ, கேப்புக்கோ ஏற்ற தாமதித்ததால் எலி உள்ளிட்ட ஜந்துக்கள் நாசம் செய்துவிட்டன. எனவே இந்த ஆண்டு தரமான அரிசி கிடைப்பது சிரமம் தான்.இதேநிலை தொடர்ந்து நீடித்தால் அரிசிக்கு முழுமையாக வெளி மாநிலங்களை நம்பியே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்." என்கிறார்கள்.