Skip to main content

அரசு போட்டித்தேர்வு நடைமுறைகள் இனிமேல் தனியாருக்கு வழங்கப்படாது - டி.ஆர்.பி பதில் மனு தாக்கல்

Published on 16/02/2018 | Edited on 16/02/2018
trb

தமிழகத்தில் நடைபெறும் அரசு போட்டித்தேர்வு நடைமுறைகள் இனிமேல் தனியாருக்கு வழங்கப்படாது என டி.ஆர் பி தரப்பில் மதுரைக்கிளையில் பதில்மனு  தாக்கல் செய்யப்படுள்ளது.

 

ஜனவரி 27ல் நாளிதழ் ஒன்றில், TNPSC, TRB, TET, SLET, NET உள்ளிட்ட போட்டித்தேர்வுகளில் செய்யப்படும் முறைகேடுகள் குறித்த செய்தி வெளியாகியிருந்தது. பணம் கொடுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று பணி பெற முயல்பவர்களின்  தேர்வு எழுதும் கோடிங் சீட்டுகள் தனியாக குறிப்பிட்டு தேர்வு முடிந்த 2 நாட்களில் அதற்கான தரகர்கள் மூலம் சரியான  விடைகள் குறிக்கப்பட்டு விடைத்தாள் திருத்தத்திற்கு செல்வது குறித்து விளக்கப்பட்டிருந்தது. 

 

இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய புகாரின் அடிப்படையில், இது போல தவறான வழியில் தேர்வானவர்கள் 19 பேர் அல்ல 270 முதல் 280 பேர் என்பது தெரியவந்துள்ளது. தவறு செய்தவர்கள் தவறான முறையில் மதிப்பெண்களை பெற்றதோடு, தகுதியுடைய நபர்களின் இடங்களையும் பறித்துள்ளனர். சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த நிகழ்வை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்கிறது.  போட்டித்தேர்வுகளை முறைப்படுத்தவும், முறைகேடுகள் நடப்பதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

 

போட்டித்தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் மீதான விசாரணையை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் அல்லது அவை தொடர்பான விசாரணைகள், சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும்" என மனுவில் கூறப்பட்டுள்ளது. 

 

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது டி ஆர் பி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இனி அரசுப் போட்டித்தேர்வுகள் தொடர்பாக நடவடிக்கைகள் தனியாருக்கு  வழங்கப்படாது எனவும், டி.ஆர்.பி அலுவலகத்திற்குள் நுழைவதற்கான ஏற்பாடுகள் பயோமெட்ரிக் முறை போன்றவை மூலம் மேம்படுத்தப்படும் எனவும் பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு தொடர்பாக 9பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், விசாரணை நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

டிஎன்பிஎஸ்சி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து பதில்மனு தாக்கல் செய்ய டி.என்.பி.எஸ்.சி-க்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 9 ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தனர்.

 

- சி.ஜீவா பாரதி


   

சார்ந்த செய்திகள்