எதிரே வரும் டிராக்டர் மீது மோதாமல் இருக்க அரசு பேருந்தை ஓட்டுநர் திடீரென திரும்பியதில் அரசு பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 60 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிரித்தப்பினர்.
சென்னையிலிருந்து போளூர் வழியாக வந்தவாசி செல்லும் பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் பச்சையம்மன்கோவில் அருகே சென்று கொண்டிருந்த பொழுது திடீரென எதிரே வந்த டிராக்டர் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் பிடிக்க கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மரத்தில் மோதியது. இதில் பேருந்தின் முன் சக்கரத்தின் அச்சு முறிந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 60 பேரும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த சேதமும் இல்லாமல் உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தினர். டீசல் டேங்கும் உடைந்ததால் தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனம் கொண்டுவரப்பட்டு தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டது. பேருந்திலிருந்து பாதுகாப்பாக இறக்கப்பட்ட பயணிகள் அனைவரும் மாற்று பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.