Skip to main content

'அரசியல் மாற்றத்திற்கு தயாராகுங்கள்'-மதுரையில் கமல்ஹாசன் பேச்சு

Published on 13/12/2020 | Edited on 13/12/2020
 'Get ready for political change' - Kamal Haasan speech in Madurai

 

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார்.

 

அவர் பேசுகையில், அரசியல் நல்லவர்கள் செய்யவேண்டிய வேலை இல்லை அது ரவுடிகளின் களம் என நம்ப வைத்து விட்டார்கள் பல நாட்களாக நம்மை. எங்கள் அரசியல் மக்களின் அரசியல், மழலைகளின் அரசியல், மாணவர்களின் அரசியல். 35 வருடங்களுக்கு முன்னால் நற்பணி மன்றத்திற்கு நாங்கள் ஒரு புத்தகம் வெளியிட்டோம் அதன் பெயர் 'தேடித் தீர்ப்போம் வா'. பழைய ஆட்களுக்கு இங்கே ஞாபகம் இருக்கும். அந்த 'தேடித் தீர்ப்போம் வா' என்பதை சிரமேற்கொண்டு செய்யும் அரசை அமைக்க வேண்டும் என்பது தான் ஆசை.

 

மக்களின் குறைகள் எங்கே இருக்கிறது என்று அரசு தேடி வந்து தீர்க்க வேண்டும். நீங்கள் எல்லோரும் உயிர்த்திருக்கிறீர்கள், துடிப்புடன் நிற்கிறீர்கள் என்பது அரசுக்கு தெரியும். தெரியாத உண்மை அல்ல. ஓட்டு கேட்கும்போது ஓடிவந்து லிஸ்ட் எடுத்து தேடி வருகிறார்கள் அல்லவா. அதேபோல் உங்கள் குறைகளையும் அவர்கள் தேடிவந்து தீர்க்க வேண்டும். வருமுன் காக்கவேண்டும் அரசு. வந்தபின் காப்பாற்றுவது அரசு அல்ல. 

 

அப்படி வருமுன் காப்பாற்றுவதுதான் எங்களது அரசு. இது கனவல்ல எங்களது திட்டம். இப்போது நீங்கள் செய்ய வேண்டியது, கட்சியில் சேர்ந்த இளைஞர்கள் செய்ய வேண்டியது வீடு வீடாகச் சென்று மக்களை நாம் தட்டியெழுப்ப வேண்டும். புதிய அரசியல் மாற்றத்திற்கு தயாராகுங்கள் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். இந்த கட்சியின் கொள்கைகள் என்ன, லட்சியம் என்ன, கோட்பாடு என்ன, செயல்திட்டம் என்ன, வாக்குறுதி என்ன என்று கேட்டால் ஒரே வார்த்தையில் சொல்ல முடியும் 'நேர்மை'. அந்த நேர்மையை  நாங்கள் கேட்பது போல் நீங்களும் கேட்க வேண்டும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்