Skip to main content

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர் கும்பல்; 2 ஆண்டுகளாக  நாசப்படுத்திய அதிர்ச்சி தகவல்!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021

 

Gang of 12 ; Shocking information ruined for 2 years!

 

நாமக்கல் அருகே, 14 வயது சிறுமியை 12 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு செய்து நாசப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வட்டமலை குள்ளப்பநகரைச் சேர்ந்த தறித்தொழிலாளி ஒருவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களில் மூத்த மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகின்றனர்.

 

தறித்தொழிலாளியுடன் சற்று மனநலம் பாதித்த மனைவி மற்றும் 14 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகனும் வசித்து வருகின்றனர். 6ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்ட சிறுமி, வட்டமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள எம்ஜிஆர் நகர், சுந்தரம் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள சில வீடுகளில் வேலை செய்து வருகிறார்.

 

அவ்வப்போது சிறுமியின் மூத்த சகோதரி பெற்றோரைப் பார்க்க வந்து செல்வார். இந்நிலையில், தங்கைக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போவது குறித்து விசாரித்திருக்கிறார். அப்போது சிறுமி, தன்னை இரண்டு ஆண்டுகளாக சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகக் கூறியுள்ளார். அவர்களில் மூத்த சகோதரியின் கணவர் சின்ராஜ் என்பவரும் சேர்ந்து தன்னை சீரழித்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். இதைக்கேட்டு மூத்த சகோதரி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 

தன் கணவனே தனக்கு துரோகம் செய்துவிட்டதை எண்ணி கலங்கிய மூத்த சகோதரி, இதுகுறித்து நாமக்கல் மாவட்ட சைல்டு லைன் அமைப்பில் புகார் அளித்தார். அவர்கள் மூலமாக மாவட்டக் குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதா  பிரியாவிடம் புகார் அளிக்கப்பட்டது.

 

இதையடுத்து சிறுமி மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

காவல்துறை விசாரணையில், சிறுமியின் மூத்த சகோதரியின் கணவர் சின்ராஜ் (35) மடடுமின்றி, வட்டமலை அருகே உள்ள எம்ஜிஆர் நகர், சுந்தரம் நகரைச் சேர்ந்த பிஎஸ்என்எல் ஊழியர் கண்ணன் (35), பன்னீர் (32), குமார் (29), வடிவேல் (29), மூர்த்தி (55), நாய் சேகர் (25), கோபி (32), அபிமன்னன் (32), சரவணன் (30), சங்கர் (24), முருகேசன் ஆகிய 12 பேர் பாலியல் வன்புணர்வு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

 

இதையடுத்து சிறுமியை நாசப்படுத்திய கும்பலைச் சேர்ந்தவர்களில் முருகேசனை தவிர மற்ற 11 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள முருகேசனை தேடி வருகின்றனர்.

 

வீட்டு வேலைக்கு வந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறியும், ஹோட்டல்களில் இருந்து பிரியாணி உள்ளிட்ட வகை வகையான உணவுப் பதார்த்தங்களை வாங்கிக்கொடுத்தும் அவரை சீரழித்திருப்பது தெரிய வந்துள்ளது.

 

இவர்களில், சின்ராஜ்தான் முதலில் சிறுமியிடம் அத்துமீறியிருக்கிறார். அவர் அதை தன் நண்பர்களிடம் கூறி பெருமையடித்தபோதுதான், கண்ணன், பன்னீர் உள்ளிட்ட மற்றவர்களும் சிறுமியை நேரம் கிடைக்கும்போதெல்லாம் நாசப்படுத்தி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

பாதிக்கப்பட்ட சிறுமியிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இன்னும் சிலர் சிக்குவார்கள் எனத் தெரிகிறது. புகாருக்கு உள்ளானவர்கள் மீது போக்சோ சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதானவர்களை ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

குமாரபாளையத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மகளிர் காவல் நிலையம் இல்லாததால், திருச்செங்கோடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

 

கடந்த ஆண்டு இதேபோல், ராசிபுரம் அருகே உள்ள அணைப்பாளையத்தில், வீட்டில் தனியாக இருந்த பள்ளிச் சிறுமிகள் இருவரை அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் முதல் 70 வயது முதியவர் வரை 12 பேர் பாலியல் வன்புணர்வு செய்து நாசப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

வறுமையில் சிக்கித் தவிக்கும் பெண் பிள்ளைகளைக் குறிவைத்து ஒரு கும்பல் பாலியல் ரீதியாக நாசமாக்கும் குற்றங்கள் நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக அதிகரித்திருப்பது பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்