Skip to main content

கஜா புயலால் படுபாதாளத்திற்கு போன மாங்காய் ஏற்றுமதி; கவலையில் வேதாரண்யம் விவசாயிகள்

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

கஜா புயல் பாதிப்பால், மாமரங்கள் அழிந்துபோனதால், மாங்கா ஏற்றுமதி பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. இந்த ஆண்டு இரண்டு கோடிக்கு மேல் மாங்காய் வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை கொள்கிறார்கள்.

 

mango

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில், பசுமை சோலையாக இருந்துவந்த புஷ்பவனம், செம்போடை, கத்தரிப்புலம், கருப்பம்புலம், நாலுவேதபதி வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் மாங்காய் சாகுபடி நடைபெறும்.  இப்பகுதியில் ஒட்டு, செந்தூரா, பங்கனப்பள்ளி, நீளம், உருமேனியா, உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாங்காய் ரகங்களை அப்பகுதி மக்கள் சாகுபடி செய்தனர். அப்பகுதி மக்களின் பிரதான வருமான தொழிலாகவும் இருந்தது. அவ்வளவு வாழ்வாதார பசுமையான மரங்களையும் கஜா புயல் தரைமட்டமாக்கி, அப்பகுதி மக்களின் வயிற்றில் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டது.
 

சீசன் காலமான ஏப்ரல், மே, ஜூன், ஆகிய மூன்று மாத காலத்தில் சுமார் பத்தாயிரம் டன் மாங்காய், மாம்பழம் கேரளா, கர்நாடகா, மும்பை, உள்ளிட்ட மாநிலங்களுக்கும்,  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.  
 

சராசரியாக  சீசன் காலங்களில் ரூபாய் 40 முதல் 75 வரை இந்த வகை மாங்காய்கள் விற்பனையாகும்.  கஜா புயல் பாதிப்பால் லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்து விட்டன. இதனால் இந்த மாங்காய் சீசனில் வேதாரண்யம் பகுதியில் மா விளைச்சல் இல்லாமல் போய்விட்டது. புயலில் தப்பிய ஒரு சில மரங்களே தற்போது காய்க்கின்றன. வேதாரண்யம் பகுதியில் நாளொன்றுக்கு 10 டன் மாங்கா ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது உள்ளூர் தேவைக்கு கூட மாங்காய் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்படுகிறது. என்கிறார்கள் அப்பகுதியினர்.
 

இதுகுறித்து அப்பகுதி விவசாயி கூறும்போது, "வேதாரண்யம் பகுதியில் முன்பு நாளொன்றுக்கு 50 டன்வரை ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால், தற்போது புயல் காரணமாக லட்சக்கணக்கான மரங்கள் விழுந்து விட்டதால் நாள் ஒன்றுக்கு 50 முதல் 100 கிலோ மட்டுமே விற்பனைக்கு செல்கிறது.  ரூ 2 கோடி இப்பகுதியில் மாங்கா ஏற்றுமதியானது, இந்த ஆண்டு பத்தாயிரம் ரூபாய் கூட இல்லை. இந்த பாதிப்பில் இருந்து மீண்டும் மாங்காய் உற்பத்தி துவங்க குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆகும்" என்கிறார் அவர் வேதனையுடன்.

 

 

 

சார்ந்த செய்திகள்