Skip to main content

''இது பழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம்'' - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

Former Minister Vijayabaskar about raid

 

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்துவருகிறார்கள். அதன்படி சென்னையில் உள்ள அவரது வீட்டிலும், கரூரில் 20 இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது.

 

அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட மொத்தம் 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் நேற்று முன்தினம் (22.07.2021) சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் பணம் ரூபாய் 25,56,000/- மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள், நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அவரது வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது அவரது வங்கி லாக்கர்களைத் திறந்து சோதனையிட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது. 

 

இந்நிலையில், இந்த சோதனை பழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''எனது வீடு உள்ளிட்டவற்றில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை பழிவாங்கும் நடவடிக்கையின் முதல்கட்டம். எனக்கு கரூரிலும் சென்னையிலும் சொந்த வீடு கிடையாது. கைப்பற்றப்பட்ட பணத்திற்கு உரிய கணக்கு உள்ளது. ஆவணங்களைச் சமர்பிப்போம். எனது வங்கி கணக்குகள் எதுவும் முடக்கப்படவில்லை. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வோம். கரூரில் அதிமுகவினர் பலருக்கு தொல்லை கொடுத்து திமுகவுக்கு மாற வைக்கின்றனர்'' எனக் கூறியுள்ளார்.

 

அதேபோல், கரூரைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், ''முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்படும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை. 2016 - 2021 ஆண்டுகளில் உள்ள சொத்து மதிப்பின் அடிப்படையில்தான் சோதனை நடக்கிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்