அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் காமராஜ், கடந்த 2015- ஆம் ஆண்டு முதல் 2021- ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 58.44 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது மகன்களான இனியன், இன்பன் உள்பட ஆறு பேர் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, இன்று (08/07/2022) அதிகாலை காமராஜ்க்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்பட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது.
முன்னாள் அமைச்சர் காமராஜ்க்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அ.தி.மு.க.வின் தலைமை நிலையச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அ.இ.அ.தி.மு.க.வை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாத விடியா தி.மு.க. அரசு, முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மீதும் அவரது நண்பர்கள்,உறவினர்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது. அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டுமென இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, காமராஜ் வீட்டில் சோதனை நடத்தப்படுவதை அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள், மன்னார்குடியில் உள்ள வீட்டின் முன்பு குவிந்துள்ளனர்.