Skip to main content

கல்லாற்றில் சிக்கிய ஐந்து பேர்; வைரலாகும் வீடியோ

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
Five people were caught in the rocks; A viral video

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், ‘தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.

தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. சிவகங்கை, கரூர், தேனி, விழுப்புரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பொழிந்து வருகிறது. கொடைக்கானலில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் ஆற்றில் இறங்கிய ஐந்து பேர் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொடைக்கானலில் நேற்று முதல் தொடர்ந்து கனமழையானது பொழிந்து வருகிறது. சின்னூர், பெரியூர், சின்னூர் காலனி உள்ளிட்ட கிராமங்கள் தேனி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளாகும். சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழக்கூடிய கிராமங்களாக சின்னூர், பெரியூர் ,சின்னூர் காலனி கிராமங்கள் உள்ளது.

பெரியகுளத்தில் இருந்து நடைபாதை வழியாக நடந்தோ அல்லது குதிரை வழியாகத்தான் அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்ல வேண்டும் என்ற நிலை அங்குள்ளது. அப்படி செல்லும்போது கல்லாறு என்ற ஆற்றை கடக்க வேண்டும். இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக கல்லாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் சின்னுர் பகுதியிலிருந்து பத்துக்கும் மேற்பட்டோர் பெரியகுளத்திற்கு அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கல்லாற்றைக் கடக்கும் பொழுது ஐந்து பேர் ஆற்றில் சிக்கிக் கொண்டனர். பிச்சை, சுரேஷ், நாகராஜ், கணேசன் உள்ளிட்ட ஐந்து பேர் நடு ஆற்றில் சிக்கி உள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிக்கிய ஐந்து பேரையும் மீட்பதற்காக பெரியகுளத்தில் இருந்து மீட்புப் படையினர் விரைந்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்