Skip to main content

ரேஷன் கடைகளில் 1-ந் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் பொருட்கள் வினியோகம்

Published on 31/08/2017 | Edited on 31/08/2017
ரேஷன் கடைகளில் 1-ந் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் பொருட்கள் வினியோகம்

ரேஷன் கடைகளில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஸ்மார்ட் கார்டு மூலமாக பொருட்கள் வினியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கமிஷனர், அனைத்து மாவட்டம் (சென்னை நீங்கலாக) உணவு பொருட்கள் வழங்கல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

பழைய குடும்ப அட்டைக்கு பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) பெற்றவர்களுக்கு மின்னணு அட்டை மூலமாகவே அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட வேண்டும். தற்போது குடும்ப அட்டை அச்சிடப்பட்டு மண்டல அலுவலகம் / வட்ட அலுவலகங்கள் மூலம் சம்பந்தப்பட்ட நியாயவிலை கடைகளுக்கு (ரேஷன் கடைகள்) அனுப்பப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள மின்னணு அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

இதுவரையில் தமிழகத்தில் ஒரு கோடியே 42 லட்சத்து 15 ஆயிரத்து 382 மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன. ஏனைய குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே 1-ந் தேதி (நாளை) முதல் அனைத்து நியாயவிலை கடைகளிலும், மின்னணு குடும்ப அட்டை பெற்றவர்களுக்கு, மின்னணு குடும்ப அட்டை மூலம் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அதன் விவரத்தை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்