Skip to main content

தந்தையை வெட்டிக் கொன்ற பி.டி. ஆசிரியரின் வெறிச்செயல்!

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

Father lost his life by his son in thoothukudi

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தசரதன்(55). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் அஸ்வத் குமார் (30). இவர் அந்தப் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். மேலும், அஸ்வத் குமாருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அருணா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

 

இந்த நிலையில், அஸ்வத் குமாருக்கும் அருணாவுக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கடந்த ஓராண்டாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதற்கிடையே, அஸ்வத் குமார் அவ்வப்போது தனது மாமனார் வீட்டிற்குச் சென்று குழந்தைகளைப் பார்த்து வந்துள்ளார். இருப்பினும், அவர் தனது மனைவி, குழந்தைகளுடன் சேர்ந்து வாழ முடியவில்லை என்ற வேதனையிலும் ஆத்திரத்திலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

 

இதனைத் தொடர்ந்து, ஆவேசமடைந்த அஸ்வத் குமார் நேற்று (10-11-23) காலை தனது மனைவி மற்றும் மாமனாரைத் தாக்குவதற்காக அரிவாளை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். இதைப் பார்த்த அஸ்வத்குமாரின் தந்தை தசரதன் இந்த சம்பவம் குறித்து அருணாவுக்கு தொலைப்பேசி மூலம் தகவல் கொடுத்தார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட அருணா, வீட்டில் உள்ள அனைத்து கதவுகளையும் பூட்டிக் கொண்டார். அதன் பின்னர், அங்கு வந்த அஸ்வத்குமார் கேட்டின் மீது ஏறிக் குதித்து வீட்டுக் கதவுகளை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

 

இதற்கிடையே, அவரது தந்தை தசரதன் காரில் அங்கு வந்தார். அவர் தனது மகனை தடுத்து வெளியே இழுத்துச் செல்ல முற்பட்டார். இதில் ஆத்திரமடைந்த அஸ்வத்குமார் தனது தந்தையை அரிவாளால் சரிமாரியாக வெட்டினார். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர், அஸ்வத்குமார் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். மேலும், இந்த சம்பவம் குறித்து அங்கிருந்த மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த கயத்தாறு காவல்துறையினர், தசரதன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அஸ்வத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்