Skip to main content

பணமோசடியில் ஈடுபட்ட மருத்துவரின் தந்தை... சிறையில் அடைக்கப்பட்ட  மருத்துவர்!

Published on 06/09/2021 | Edited on 06/09/2021

 

The father of the doctor involved in the money laundering

 

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் துக்காராம். இவர் தனது மகன் படிப்பதற்காக எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித் தருமாறு அவரது நெருங்கிய நண்பரிடம் கூறியுள்ளார். அவரது நண்பருக்கு மிகவும் நெருக்கமான நண்பர் விழுப்புரம் மாவட்டம் உப்புவேலூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம். இவரை, அவரது நண்பர் துக்காராமிடம் அறிமுகம் செய்துவைத்துள்ளார். அப்போது பன்னீர்செல்வம் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் இயக்குநராக இருப்பதாகவும் இதன் மூலம் துக்காராம் மகன் எம்.பி.பி.எஸ் படிப்பதற்கு மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கித் தருவதாகவும் உறுதி கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பிய துக்காராம், 2017ஆம் ஆண்டு ரூபாய் 85 லட்சம் பணத்தை பன்னீர்செல்வத்திடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இதைத் தொடர்ந்து அகில இந்திய மருத்துவக் கவுன்சில் வழங்கியது போன்ற ஒரு நுழைவு சீட்டை பன்னீர்செல்வம் துக்காராமிடம் கொடுத்துள்ளார். அவர் அந்த நுழைவுச்சீட்டுடன் துக்காராமின் மகன் படிக்க விரும்பும் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிக்குச் சென்று அந்த சீட்டைக் கொடுத்து கேட்டபோது, அந்த சீட் போலியானது என தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த துக்காராம், தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர் சீட்டுக்காக கொடுத்த 85 லட்சம் பணத்தைத் திருப்பித் தருமாறு பன்னீர்செல்வத்திடம் கேட்டுவந்துள்ளார். இதையடுத்து பன்னீர்செல்வமும் அவரது மகன் டாக்டர் நிவாஸும், ரூபாய் 42 லட்சத்தை துக்காராம் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளனர். மீதி பணம் 43 லட்சத்தை துக்காராமிடம் திருப்பித் தராமல் ஏமாற்றிவந்துள்ளனர்.

 

இதுகுறித்து துக்காராம் அவர்களிடம் கேட்டபோது அவரை மிரட்டியுள்ளனர். இதையடுத்து துக்காராம் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பண மோசடி குறித்து புகார் அளித்துள்ளார். அவரது புகாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா அவர்கள் குற்றப்பிரிவினரிடம் ஒப்படைத்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, குற்றப்பிரிவு போலீசார் துக்காராமிடம் பணமோசடி செய்த பன்னீர் செல்வத்தின் மகன் நிவாசை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். எம்.பி.பி.எஸ். டாக்டர் சீட்டு வாங்கித் தருவதாக 43 லட்சம் மோசடி செய்த மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றுள்ள சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்