Skip to main content

சித்து வேலையால் ரூ.4.66 கோடி மோசடி.. கைதான போலி சாமியார்..!!!

Published on 26/11/2018 | Edited on 26/11/2018
ravi

 

 

தன்னைக் கொண்டு ஆசிரமம் அமைக்க கடவுள் உத்தரவிட்டதாகக் கூறி, சித்து வேலைகள் செய்து குவைத் வாழ் தமிழரிடம் ரூ.4.66 கோடி மோசடி செய்த போலி சாமியாரை சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.



விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் ராமதாஸ். அரேபிய நாடுகளில் ஒன்றான குவைத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சி.இ.ஓ.வாகப் பணியாற்றி வரும் இவருக்கு இரத்த அழுத்தம் உள்ளிட்ட சில உடல் ரீதியான பிரச்சினைகள் இருந்துள்ளது. அதே நிறுவனத்தில் பணியாற்றும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த அஷ்ரப்அலி (எ) அப்துல்அஜீஸ் தமிழர் என்ற முறையில் ராமதாஸிடம் அறிமுகமாகி, " தனக்கு தெரிந்த சித்தர் ஒருவர் சிவகங்கை அண்ணாமலை நகரில் வசித்து வருகிறார். அவர் பெயர் ரவி. அவரிடம் அறிமுகம் கிடைத்தாலேப் போதும். உங்களுடைய நோய்கள் யாவும் குணமாகும்." என்கிற ரீதியில் போலி சாமியார் ரவியை சித்தராக அடையாளம் காட்டியிருக்கின்றார் அவர். அதன் பிறகே ரூ.4.66 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.

 

"காக்கை உட்கார விழுந்த பனம்பழம்" கதையாய், சிவகங்கை சாமியார் ரவியின் சித்து வேலைகள் மூலம் ராமதாஸிற்கு ஆரம்பத்தில் நோய் குணமாயிருக்கின்றது. கடவுள் நேரடியாக ரவி சித்தர் மூலம் பேசுகிறார் என்பதனை முழுதாய் நம்பியிருக்கின்றார். இது தான் சரியான தருணமென, "வந்தவாசியில் ஆசிரமம் அமைக்க கடவுள் உத்தரவிட்டிருக்கின்றார்." என்று கூறி வைக்க, 2015ம் ஆண்டில் முதல் தொகையாக ரூ.1.10 கோடி பணத்தை தன்னுடைய வங்கி கணக்கு மூலம் போலிச்சாமியாருக்கு அனுப்பி வைத்திருக்கின்றார் ராமதாஸ். அத்துடன் இல்லாமல், "ஏற்கனவே ஆசிரமம் அமைக்க கூறிய இடத்தில் ஆண்டவன் அனுமதிக்கவில்லை. வேறொரு இடத்தைக் காட்டுகிறார்." என மீண்டும் தகவல் கூற, அன்று தொடங்கி இந்த புகார் வரும் வரை ஏறக்குறைய இடம் வாங்குவதற்காக மட்டும் ரூ.4.66 கோடி பணத்தை அனுப்பி வைத்துள்ளார் அவர். போலி சாமியாரும் ஆசிரமம் அமைத்ததாக தெரியவில்லை. இந்நிலையில் ராமதாஸ் புகார் கொடுக்க நாங்களும் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்துள்ளோம்." என்கின்றனர் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்.

 

ராமதாஸின் புகாரின் பேரில் போலிச்சாமியார்  ரவி, அவரின் மனைவி புவனேஸ்வரி, உறவினர் மோதீஸ்வரன், அஷ்ரப்அலி (எ) அப்துல்அஜீஸ், பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜமாணிக்கம், சென்னையை சேர்ந்த தேவா (எ) பொன்னியப்பன் ஆகிய அறு பேர் மீது வழக்கு பதிவு செய்து ரவியை மட்டும் கைது செய்துள்ளனர் போலீசார். இதுபோல் திருச்சியை சேர்ந்த சுப்பரமணியனிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக தகவல் வர, அவரை வரவழைத்து அவர் கொடுத்த புகாரின் பேரிலும் ரவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலிச் சாமியாரை நம்பி வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் ரூ.4.66 கோடியை பறிகொடுத்துள்ள சம்பவம் சிவகங்கையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்