கோப்புப்படம்
சேலத்தில் அரசு அனுமதி பெறாமல் போலியாக கூட்டுறவுச் சங்கத்தை நடத்தி மோசடியில் ஈடுபட்டு வரும் நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் சரக கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் முத்து விஜயா, சூரமங்கலம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்தப் புகாரில் கூறியுள்ளதாவது:
சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனியில் மாவட்ட நெசவாளர் மற்றும் துணிநூல் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கம் கூட்டுறவுத்துறையில் அனுமதி பெறாமல், விதிகளுக்குப் புறம்பாக செயல்படுகிறது. அந்த சங்கத்தில் பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்வது தொடர்பாக விளம்பரம் வெளியிட்டுள்ளனர். எந்த ஒரு கூட்டுறவு சங்கத்திற்கும், கூட்டுறவு வங்கிக்கும், கூட்டுறவுத்துறையே ஆட்களை நியமிக்கும்.
அதனால் போலி கூட்டுறவு சங்கத்தை நடத்தி ஆட்கள் தேர்வு செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் முத்து விஜயா கூறியிருந்தார். இந்த புகார் குறித்து ஆய்வாளர் கந்தவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முதல்கட்ட விசாரணையில், புகாரில் கூறியுள்ளபடி சர்ச்சைக்குரிய அந்த கூட்டுறவு சங்கம் அரசு அனுமதியின்றி இயங்கி வருவதும், அங்கு 20 ஊழியர்கள் பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. தற்போது மேலும் புதிதாக ஊழியர்களை தேர்வு செய்வதற்காக சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்துள்ளனர். எனினும், அந்த சங்கத்தை நடத்தி வருபவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. மேலும், இந்த சங்கத்தில் ஏராளமான உறுப்பினர்களைச் சேர்த்து பண வசூல் செய்து வந்ததோடு, வங்கி போல செயல்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.