Skip to main content

போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்கள் அபகரிப்பு: புகார் தந்தவரை கைது செய்த போலீசார்

Published on 31/08/2017 | Edited on 31/08/2017
போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்கள் அபகரிப்பு: புகார் தந்தவரை கைது செய்த போலீசார்

போலி ஆவணங்கள் தயாரித்து சொத்துக்களை அபகரிக்க முயன்ற வழக்கில் புகார் தந்தவருக்கே அதில் தொடர்பிருந்தது தெரியவந்ததால் போலீசார் அவரை கைது செய்தனர்.

கடந்த 1.4.17ல் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் கதிர்காமம், வழுதாவூர் சாலையைச் சேர்ந்த முத்தையன் (67) என்பவர் அளித்த புகாரின் பேரில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. கிருஷ்ணா நகர்12வது குறுக்குத் தெருவில் கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள சில மூதாதையரின் சொத்துகளுக்கு நான் தான் உரிமையாளர். அந்த இடத்தில் சில கட்டுமான பணிகளை மேற்கொண்ட போது பிரான்சிஸ், அவருடைய கூட்டாளிகள் ராஜா, வினோத், டேனியல், விஜி உள்ளிட்டோர் வந்து அந்த சொத்துக்கள் எல்லாம் பிரான்சிஸ்க்கு சொந்தமானவை எனக்கூறி மிரட்டினர். மேலும் பிரான்ஸிஸ் போலி ஆவணங்களை தயாரித்து அந்த சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடியுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் முத்தையன் கூறியிருந்தார்.

இதையடுத்து போலீஸார் இப்புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே குற்றம்சாட்டப்பட்ட வில்லியனூர் ராஜா, லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் டேனியல், அசோக் நகர் பிரான்சிஸ், ஆகியோர் கடந்த 13.4.17ல் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் தாங்கள் போலி ஆவணங்கள் தயாரித்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் மேலும் விசாரணை செய்ததில் புகார் தந்த முத்தையன் வைத்துள்ள ஆவணங்களே போலி எனத்தெரியவந்தது. அவை ராஜா மற்றும் டேனியல் ஆகியோர் தயாரித்து முத்தையனுக்கு வழங்கியதும் தெரியவந்தது. பிரான்சிஸ் அளித்த தகவலின் பேரில் அவரது வீட்டில் இருந்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து போலீஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் முத்தையன், அவரது மனைவி கலைமகள், மறறும் ஜார்ஜ் என்பவர் இணைந்து கிருஷ்ணா நகரில் உள்ள சில சொத்துக்களை போலி ஆவணங்கள் தயாரித்து அவற்றின் உரிமையாளரை ஏமாற்றி அபகரிக்க முயன்றது தெரியவந்தது. பத்திர பதிவுத் துறையில் ஆவணங்களை சரிபார்த்த போது முத்தையன்தயாரித்த ஆவணங்கள் போலி எனத்தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஜூலை 27ம் தேதி முத்தையன் மனைவி கலைமகளை லாஸ்பேட்டை போலீஸார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான முத்தையன் தலைமறைவாகி விட்டார்.

நீதிமன்றம் மூலம் பிடியாணை பெறப்பட்டு அவரது சொத்துக்களையும் முடக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி எஸ்.பி. ரச்சனா சிங் தலைமையில் தனிப்படை அமைத்து முத்தையனை கைது செய்தது. 

சார்ந்த செய்திகள்