Skip to main content

“கொடநாடு விவகாரத்தில் அனைவரையும் விசாரிக்க வேண்டும்” - சரத்குமார்!

Published on 09/09/2021 | Edited on 09/09/2021

 

"Everyone should be investigated in the Kodanadu issue" - Sarathkumar!

 

திண்டுக்கல்லில் சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் என்.எஸ். நாதன் இல்ல திருமணம் நடைபெற்றது. இதில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.

 

அதன்பின் சரத்குமார் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “திமுக அரசு பதவியேற்று ஆறு மாதங்கள் ஆன பிறகுதான் அவர்கள் செயல்பாடு குறித்து கூற முடியும்.  அந்தவகையில் அவர்கள் கடந்த ஆண்டுகளைவிட என்ன சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என நினைக்கிறார்களோ அவற்றைச் செய்ய அவர்களுக்கு ஆறு மாத காலம் அவகாசம் தேவைப்படும். அதன் பிறகு திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்துக் கூற முடியும். 

 

மத்திய அரசு, தமிழக முதலமைச்சரின் தேவையான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளச் செவிசாய்க்க வேண்டும். கொடநாட்டில் அசம்பாவிதம் நடந்துள்ளது; உண்மை. அதை யாரும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. அதில் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறுவதற்கு ஏன் பயப்பட வேண்டும். நியாயமான முறையில் அனைவரும் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்தான். அவர்களை விசாரணை நடத்துவதில் தவறில்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பு குறித்து மீண்டும் விசாரணை நடத்துவது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தான்,  அதற்குப் பதில் சொல்ல வேண்டும். 

 

உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை 9 மாவட்டங்களில் போட்டியிடச் சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்வம் காட்டி மனுக்கள் கேட்டு வருகின்றனர். மக்களுக்கு யார் யாரெல்லாம் சேவை செய்ய நினைக்கிறார்களோ அவர்களைப் போட்டியிட வைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறேன். மக்கள் பணி செய்ய வேண்டிய பதவிக்காக உள்ளாட்சி அமைப்பு இருப்பதால் அதைக் கட்சிக்கு அப்பாற்பட்டு நான் பார்க்கிறேன். நேரடியாக மக்களிடம் தொடர்பு வைத்துக் கொள்பவர்கள் நிச்சயமாகத் தேர்தலில் நிற்பார்கள். அந்தந்தப் பகுதிகளில் நிர்வாகிகள் கூட்டணியுடன் சேர்ந்து நிற்பதாகக் கூறினால் அது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்