Skip to main content

குவைத் நாட்டில் தவிக்கும் மனைவி  வாட்ஸ் அப்பில் கதறல்- மீட்க கோரி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் கணவன் கண்ணீர்

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

 

ஈரோடு கருங்கல்பாளையம், கே.ஏ.எஸ் நகரைச் சேர்ந்த நவாஸ் கான் என்பவர் இன்று தனது மகளுடன் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தார்.  பிறகு  எஸ் .பி .சக்தி கணேசனை சந்தித்து மனு ஒன்றை  கொடுத்தார்.

 

y

 

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:    ‘’நான் ஈரோடு  கருங்கல்பாளையம் கே .ஏ. எஸ் நகர் பகுதியில் குடியிருந்து வருகிறேன்.  எனது மனைவி பெயர் யாஸ்மின்.  எங்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.  நான் அதே பகுதியில்  டீக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறேன்.

 

 கடந்த சில மாதங்களுக்கு முன்பு குவைத் நாட்டில் இருந்து வந்த எனது அக்கா மகன் எனது மனைவியை குவைத் நாட்டிற்கு வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறினான். நல்ல சம்பளம் கிடைக்கும் என்று கூறினான்.   இதனை நம்பி நாங்களும் அவனுடன் எனது மனைவி யாஸ்மினை கடந்த ஜனவரி மாதம்  அனுப்பி வைத்தேன்.  

 

குவைத்துக்கு சென்ற எனது அக்கா மகன்,   என் மனைவியை ஒரு வீட்டில் வேலைக்கு அமர்த்தி விட்டு மாலத்தீவுக்கு சென்று விட்டான்.  கடந்த நான்கு மாதமாக எனது மனைவி பற்றி எந்த ஒரு தகவலும் எனக்கு  தெரியவில்லை.  அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.  இதனால் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் தெரியாமல் இருந்து வந்தது.

 

y

 

இந்நிலையில் நேற்று திடீரென எனது மனைவி யாஸ்மின் வாட்ஸ அப் வீடியோ மூலம் என்னை தொடர்பு கொண்டார்.   அப்போது அவர் இங்கு உள்ளவர்கள் என்னை அடித்து துன்புறுத்துகிறார்கள்.  சுடு தண்ணீரை உடலில் ஊற்றி கொடுமைப் படுத்துகிறார்கள்.  சம்பளத்தை பற்றி பேசினால் கொன்று விடுவதாகவும் மிரட்டுகிறார்கள் என்று கூறி கதறினார்.  உடனடியாக காப்பாற்றும் படி கண்ணீர் விட்டு கதறினார்.  என் மனைவி பேசிக்கொண்டிருக்கும் போதே தொலைபேசி இணைப்பு திடீரென்று துண்டிக்கப்பட்டது.

 

நான் மீண்டும் அந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால்  தொடர்பு கிடைக்கவில்லை.  எனவே தாங்கள்  உடனடியாக தலையிட்டு வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் எனது மனைவியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என அவர் மனுவில் கூறியிருந்தார்.

 

வீட்டு வேலைக்காக வெளிநாடு சென்ற மனைவியை மீட்க கண்ணீருடன் கணவன் கதறியது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
 

சார்ந்த செய்திகள்