Skip to main content

ஈரோடு: சுயேச்சை சின்னம் ..! தி.மு.க.வினர் அதிருப்தி,, அ.தி.மு.க.வினர் குஷி...!

Published on 15/03/2019 | Edited on 15/03/2019
திமுக கூட்டணியில் உள்ள ம.தி.மு.க.வுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் அக்கட்சியின் மாநில பொருளாளர் அ.கணேசமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார். இந்த நிலையில் மதிமுகவுக்கு ஏற்கனவே பம்பரம் சின்னம் இல்லை என்று நிலை ஏற்பட்டுவிட்டது. இதன் காரணமாக கணேசமூர்த்தி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது தான் சரியாக இருக்கும் என ஈரோடு மாவட்ட திமுகவினர் மற்றும் மதிமுகவினரும் அவரவர்கள் கட்சித் தலைமைக்கு இக்கருத்தை கொண்டு சென்றனர். 
 
 
 
election

 

 
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் வேட்பாளராக போட்டியிடுகிற கணேசமூர்த்தியும்  உதயசூரியன் சின்னத்தில் நிற்கலாம் என முடிவு செய்தனர் ஆனால் அக்கட்சியின் அவை தலைவரான திருப்பூர் துரைசாமி தொடக்கம் முதலே தி.மு.க. சின்னத்தில் நாம் நிற்கக் கூடாது அப்படி என்றால் மதிமுக தனிக்கட்சியாக எப்படி நடத்த முடியும்? என தொடர்ந்து எதிர்ப்பு நிலையை எடுத்து வந்தார். இந்த சூழ்நிலையில் திருப்பூர் துரைசாமி கருத்தை மறுக்க முடியாமல் சரி சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிடலாம் என்ற முடிவிற்கு மதிமுக தலைமையும் வேட்பாளரான கணேசமூர்த்தியும்  முடிவு செய்துள்ளார்கள்.
 
 
 
இது நமது வெற்றியை பாதிக்கக்கூடிய ஒரு முடிவு என்று வெளிப்படையாகவே தெரிகிறது. உதயசூரியன் சின்னத்தில் என்றால் வெற்றி உறுதி என்பதை இப்போதே உறுதிப்படுத்துவோம் ஆனால் சுயேட்சை சின்னம் என்றால் அவ்வளவு சுலபம் கிடையாது. மேலும் மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள சின்னம் உதயசூரியன். அ.தி.மு.க. அரசுக்கு எதிராகவும் மத்தியில் பா.ஜ.க. மோடி அரசுக்கு எதிராகவும்  மக்கள் மனநிலை உள்ளது. இதை வாக்குகளாக கொண்டுவர வேண்டுமென்றால் எதிர்ப்பு ஓட்டுகள் தி.மு.க. அணிக்கு வரும் பட்சத்தில் அங்கு சின்னம் முக்கியமானதாக இருக்கும். அரசியல் கட்சிகளில் மிகுந்த அறிமுகமாக உள்ள சின்னம் உதயசூரியன். ஆனால் புதிதாக ஒரு சுயேச்சை சின்னம்  வாங்கி இதுதான் எங்களின் சின்னம் என்று மக்களிடம் கொண்டுபோய் அவர்களிடம் பதிய வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மேலும் அ.தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குவார்கள். இந்த சூழ்நிலையில் எதிர்ப்பு ஓட்டுகள் ஒரே அணிக்கு வரவேண்டும் என்றால் சின்னம் தான் முக்கியம். உதயசூரியன் தான் அவர் போட்டியிடுகிற சின்னமாக இருக்க வேண்டும். என தொடர்ந்து தி.மு.க.வினரும் கூட்டணிக் கட்சியினரும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் ம.தி.மு.க. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி ஏற்றுக் கொள்ளவில்லையாம். 
 
 
 
 
இதனால் ஈரோடு தொகுதி தி.மு.க. கூட்டணியினர் மிகுந்த சோர்வாகவும் அதிருப்தியிலும் உள்ளார்கள். தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு.க. சுயேச்சை சின்னம் என்பதை தெரிந்துகொண்ட எதிரணியான அதிமுகவினர் இப்போதே வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக குஷி யுடன் அவர்கள் பரபரப்பாக பேசுகிறார்கள். தி.மு.க. தலைமை இந்த சின்னம் பிரச்சனையை எப்படி கையாளப் போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும்.
 
 
 
 

சார்ந்த செய்திகள்