Skip to main content

"தண்ணீர் பற்றாக்குறைக்கு பொதுப்பணித்துறையினரின் அலட்சியமே காரணம்" - இ.பெரியசாமி தாக்கு!

Published on 29/11/2019 | Edited on 29/11/2019


 

ஆத்தூர் தொகுதியில் குடிநீர் பஞ்சத்திற்கும் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் போனதற்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

 

 E.Periyasamy

 


திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலிருந்து மழை பெய்யும் போது பெரியாற்றின் மூலமாக வரும் மழைத் தண்ணீரானது பெரிய  கன்னிமார் கோவில் அருகே இயற்கையாகவே அமைந்துள்ள பாறாங்கற்களால் ஆன தடுப்பில் உள்ள இடுக்கின் வழியாகவும், அதற்கு மேலாகவும் வெளியேறும் தண்ணீர், கூழையாற்று தண்ணீருடன் கலக்கிறது.

பின்னர் அது ஆத்தூர் பகுதியில் உள்ள கருங்குளம், பகடைக்குளம், புல்வெட்டிக்குளம் ஆகிய குளங்களுக்கும் குடகனாறு வழியே தாமரைக்குளம், அணைப்பட்டி குளம் நிறைந்து அனுமந்தராயன்கோட்டை, பொன்னிமாந்துறை, மயிலாப்பூர், குட்டத்துப்பட்டி, ஆவாரம்பட்டி, அணைப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மக்களின் விவசாய பாசனத்திற்காவும், குடிதண்ணீருக்காகவும் பயன்பட்டிருந்தது. மேலும் வக்கம்பட்டி, சீவல்சரகு, வீரக்கல், அனுமந்தராயன்கோட்டை, பித்தளைப்பட்டி ஆகிய கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக இருந்து வந்தது. தற்போது சித்தையன்கோட்டை பகுதியில் சிமிண்ட் வாய்க்கால் அமைக்கும்போது பொதுப்பணித்துறையினரின் அலட்சியப் போக்கால் பாறாங்கற்கள் மீது சிமிண்ட்டினால் ஆன கலவையை கொட்டி தடுப்பணை அமைத்துவிட்டனர். 

இதனால் கடந்த ஒரு வருட காலமாக மேற்கண்ட பகுதிகளில் குடிதண்ணீர் பஞ்சமும், விவசாய பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இது சம்மந்தமாக கடந்த மூன்று ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாய சங்க கூட்டத்தினை கூட்டுவதற்கு பலமுறை வலியுறுத்தியும் இதுநாள் வரை கூட்டம் கூட்டவில்லை. இதனை கண்டித்தும், குடிதண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் கிராம மக்கள் நலன் கருதியும் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஆத்தூர் சட்டமன்ற தி.மு.க.  உறுப்பினருமான இ.பெரியசாமி அவர்கள் சித்தையன்கோட்டை பாசன சங்க விவசாயிகள் சங்கம், ஆத்தூர் பாசன சங்க விவசாயிகள் சங்கம், தாமரைக்குளம் பாசன விவசாயிகள் சங்கம் (பொன்னிமாந்துறை, அனுமந்தராயன்கோட்டை, மைலாப்பூர், ஆவாரம்பட்டி, அணைப்பட்டி) ஆகிய விவசாயிகளுடன் சேர்ந்து பழனி பொதுப்பணித்துறையைச் சேர்ந்த இ.இ. மற்றும் பெரியகுளம் பொதுப்பணித்துறையைச் சேர்ந்த இ.இ. ஆகியோரை அழைத்து கூட்டம் நடத்தி மேற்கண்ட அனைத்து பகுதி விவசாயிகளின் பிரச்சனைகளுக்கும் பொதுமக்களின் குடிதண்ணீர் பிரச்சனைக்கும் தீர்வுகாண மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். 

 

 E.Periyasamy



மனு கொடுத்துவிட்டு மாவட்ட ஆட்சியரிடம் பேசிய, திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமி, "சிமிண்ட் வாய்க்கால் கட்டும்போதே பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இப்பகுதி விவசாயிகள் பலமுறை எடுத்துக்கூறியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால் ஆத்தூர் தொகுதி முழுவதும் கடுமையான குடிதண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பலமுறை நான் உட்பட விவசாய சங்கத்தினரும் பலமுறை மனுக்கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குடகனாற்று கரையோரம் ஆழ்துளை கிணறுகள் அமைத்து பொதுமக்களுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது பாதிக்கப்பட்டுள்ளது. 

குளங்களில் நீர் நிரம்பாமல் குளத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லை. இதனால் ஆத்தூர் தொகுதி மக்கள் கடுமையான குடிதண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள் பாதிக்கப்பட்டால் நாங்கள் விவசாயிகள், பொதுமக்களை ஒன்றுதிரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் எனக் கூறினார். பின்னர் மாவட்ட ஆட்சியர் ஆத்தூர் தொகுதி மக்கள் விவசாயிகள் நலன் கருதி கன்னிமார் கோவில் அருகே உள்ள தடுப்பணையை ஆய்வு செய்து முறையாக தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மாவட்ட ஆட்சியரின் சந்திப்பின் போது முன்னாள் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் கு.சத்தியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், அனுமந்தராயன்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.இன்பராஜ், ஸ்ரீராமபுரம் பேரூர் கழக செயலாளர் ராஜா, பொன்னிமாந்துறை விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த அறிவழகன், ஆத்தூர் பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த மௌலானா, சுப்பிரமணி மற்றும் தாமரைக்குளம் பாசன விவசாயிகள் பலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும்போது உடன் இருந்தனர். இப்பிரச்சனைக்கு விரைவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீர்வு காணாவிட்டால் மாபெரும்  போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 
 

சார்ந்த செய்திகள்