திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே திருவடி தெருவில் யானை ஒன்று சாலையில் தறிகெட்டு ஓடிவந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் அலறியடித்துப் பாதுகாப்பான இடத்திற்கு ஓடி மறைந்துகொண்டனர். அந்த யானையைக் கட்டுப்படுத்த முயன்ற யானை பாகனும், யானையின் பின்னாடி ஓடிவந்துள்ளார். ஆனால், யானை கட்டுக்கடங்காமல் ஓடியுள்ளது. எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த சிலர் பயந்து வண்டியைத் திருப்பிக்கொண்டு, சாலையில் வந்த பொதுமக்களை எச்சரித்த வண்ணம் விரைந்து சென்றனர்.
ராஜகோபுரம் பகுதியிலிருந்து மூலத்தோப்பு வழியாக ராகவேந்திரா கோயில்வரை யானை மிரண்டு ஓடியுள்ளது. அங்கு போலீஸ் குடியிருப்பு அருகே உள்ள காலி மனைப் பகுதியில் யானை நின்றுள்ளது. அதன் பின்னர் யானைப் பாகன் அதனுடன் பேச்சு கொடுத்து அருகில் சென்றுள்ளார். பிறகு குளிர்ந்த நீரை யானை மீது ஊற்றி அதனை ஆசுவாசப்படுத்தியுள்ளார். பிறகு யானை பாகனின் கட்டுக்குள் வந்துள்ளது. அதன் பின்னர் அந்தக் காலி மனையிலேயே யானை விரும்பும்வரை சிலமணி நேரம் நிற்கவைத்து, யானை விரும்பியபோது அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. அங்கு வந்த ஸ்ரீரங்கம் போலீசார், யானை குறித்து விசாரணை நடத்தினர். அதில், ‘திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சகரை சாலை கொள்ளிடக்கரை பகுதியைச் சேரந்த பாஸ்கர் என்ற தனியாருக்குச் சொந்தமான யானை’ என்று தொியவந்தது. யானை மிரண்டு ஓடியபோது எதிரே பொதுமக்கள் யாரும் சிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.