Skip to main content

‘மின் நுகர்வோர்கள் கவனத்திற்கு’ - அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பு

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Electricity Consumers Attention Minister Thangam Tennarasu Important Announcement

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன. மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாகத் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மின் நுகர்வோர்கள் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கால நீட்டிப்பு செய்வதாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த சில தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் அதிகனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து அரசு சார்பில் பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 தினங்களாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு மின் நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கால நீட்டிப்பு அளிக்கப்படுகிறது.

அதன்படி, மின் உபயோகிப்பாளர்களின், மின் கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 18.12.2023 முதல் 30.12.2023 வரை இருந்த நிலையில், அதிகனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அபராதத் தொகை இல்லாமல் 02.01.2024 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. ஏற்கனவே, மின் உபயோகிப்பாளர்கள் மின் கட்டணத்துடன் 18.12.2023 அன்று அபராதத் தொகை செலுத்தி இருப்பின், அந்த அபராதத் தொகை அடுத்து வரும் மாத மின் கட்டணத் தொகையில் சரிக்கட்டப்படும். இந்த கால நீட்டிப்பு வீடு, வணிக பயன்பாடு, தொழிற் சாலைகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மற்றும் பிற மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சைவப் பூனையாக மாறிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்! - வியந்து பாராட்டிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Minister Thangam Thennarasu admired Minister KKSSR Ramachandran

விருதுநகர் வடக்கு மாவட்டம் – விருதுநகர் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அந்தக் காலத்தில் எப்படி இருந்தார்? இந்தக் காலத்தில் எப்படி இருக்கிறார் என்று சிலாகித்துப் பேசினார்.

தங்கம் தென்னரசு உரையாற்றியபோது “விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பெற்ற வெற்றியை எத்தனையோ பேர் குறை சொல்கிறார்கள். இந்த வெற்றியானது,  அச்சு அசலாகப் பத்தரை மாற்றுத் தங்கமாகப் பெற்ற வெற்றியாகும். நமது வருவாய்த்துறை அமைச்சரை நோக்கி சிலர் கணைகளை ஏவுகிறார்கள். இந்த வெற்றியைத் தட்டிப் பறித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். நாங்கள் எல்லாம் குழந்தைப் பருவத்தில் இருந்தபோது, அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் எப்படி இருந்தார்  என்பதை அறிவோம்.

இன்றைக்கு அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தன்னை முற்றிலும் ஒரு சைவப் பூனையாக மாற்றிவிட்டார். அவருடைய காலத்தில், எங்களைப் பொறுத்தமட்டில், அவர் இந்த அளவுக்கு மக்களோடு மக்களாக இணைந்து, இந்த நாட்டு மக்களுக்காக உழைப்பதிலே தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, ஜனநாயகத்தைக் காக்கின்ற ஒரு அமைச்சராக, இந்தத் தேர்தல் களத்திலே நடமாடிக்கொண்டிருந்தார்.” என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

Next Story

‘ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி’ - உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
'Rajesh Das petition dismissed' - High Court action

தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான பீலா வெங்கடேசன் கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். இவரின் முன்னாள் கணவரான தமிழகத்தின் ஓய்வுபெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கடந்த மே 21 ஆம் தேதி அவரின் நண்பர்களுடன் பீலா வெங்கடேசனின் பண்ணை வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் பீலா வெங்கடேசன் இது குறித்து புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார், ராஜேஷ் தாஸ் மீது கொலை மிரட்டல், சட்ட விரோதமாகக் கூடுதல், தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே ராஜேஷ் தாஸ் வசித்து வரும் செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் உள்ள பங்களா வீட்டில் கடந்த மே 20 ஆம் தேதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பீலா வெங்கடேசன் தமிழக அரசின் எரிசக்தித் துறையின் முதன்மை செயலாளராக இருப்பதால் அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக ராஜேஷ் தாஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதே சமயம் ராஜேஷ் தாஸ் வசித்து வரும் வீட்டின் மின் இணைப்பு பதிவு பீலா வெங்கடேசன் பெயரில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தற்போது அவர் மின் இணைப்பு வேண்டாம் எனக் கூறி அளித்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

'Rajesh Das petition dismissed' - High Court action

இதனையடுத்து வீட்டுக் காவலாளியைத் தாக்கிய வழக்கில் ராஜேஷ் தாஸ் கேளம்பாக்கம் போலீசாரால் கடந்த 24 ஆம் தேதி (24.05.2024) காலை கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற பிணையில் ராஜேஷ் தாஸ் விடுவிக்கப்பட்டார். அதே சமயம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்றைச் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது பீலா வெங்கடேசன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். அவர், “தையூர் பங்களா வீட்டில் வீட்டின் மின்சார இணைப்பு ஏற்கனவே துண்டிக்கப்பட்டு விட்டதால் இந்த மனு செல்லத்தக்கதல்ல. பீலா வெங்கடேசன் பெயரில் மின் இனைப்பைத் தற்காலிகமாகத் துண்டிக்கும் படி கோரிக்கை வைப்பதற்கு முழு அதிகாரம் உள்ளது. ராஜேஸ் தாஸுக்கு சொந்தமாக நுங்கம்பாக்கத்தில் ஒரு விடும், பல இடங்களில் தங்கும் விடுதிகளும் உள்ளதால் அந்த இடங்களில் அவர் தங்கிக்கொள்ளலாம்” என வாதிட்டார். 

'Rajesh Das petition dismissed' - High Court action

அதற்கு ராஜேஷ் தாஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி. பிரகாஷ், “அந்த வீட்டிற்கான வீட்டுக்கடனை ராஜேஷ் தாஸ் தான் செலுத்தி வருகிறார். எனவே, அவருடைய உடல் நலனைக் கருத்தில் கொண்டு மீண்டும் மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார். இதனையடுத்து இந்த வழக்குத் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (11.06.2024) தீர்ப்பளித்த நீதிபதி அனிதா சுமந்த், “இந்த வசிப்பிடம் குறித்து இந்த நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது. சம்பந்தப்பட்ட நீதிமன்றம் தான் தீர்மானிக்க முடியும். இருவரும் சமரசம் மையத்திற்குச் சென்று சமரசம் செய்துகொள்ள உத்தரவிட முடியாது” எனக் கூறி ராஜேஷ் தாஸின் மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.