Skip to main content

தந்தை வைத்த மின்வேலியில் சிக்கி மகனும், தோழியும் உயிரிழப்பு! 

Published on 01/08/2022 | Edited on 01/08/2022

 

electric fence set by the father two person incident police investigation

 

கிருஷ்ணகிரி அருகே, தந்தை வைத்த மின்வேலியில் சிக்கி மகனும், அவருடைய தோழியும் பலியாகினர்.

 

கிருஷ்ணகிரி அருகே உள்ள சுபேதார்மேடு பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 55). இவருடைய மகன் தசரதன் (வயது 26). இருவரும் விவசாயிகள். தசரதனுக்கு  திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். 

 

இதே ஊரைச் சேர்ந்தவர் சத்யா (வயது 25). இவரை சூளகிரி அருகே உள்ள பி.ஜி.துர்க்கத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சத்யா, கணவரை பிரிந்து தனது ஒன்றரை வயது குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். ஆரம்பத்தில் தசரதனும், சத்யாவும் நட்பாக பழக தொடங்கினர். இதுவே அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்தது.  

 

இந்நிலையில் ஜூலை 29- ஆம் தேதி, சத்யா தன்னுடைய அண்ணன் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று வருவதாகக் கூறி, தனது குழந்தையுடன் சுபேதார்மேடு பகுதிக்கு வந்துள்ளார். 

 

அங்கு தசரதனை சந்தித்துள்ளார். எம்.சி.பள்ளி அருகில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்ற தசரதன், அங்குள்ள இரும்பு கொட்டகையில் சத்யாவுடன் இரவில் தனிமையில் இருந்துள்ளார். சத்யா, தனது குழந்தையை அந்த கொட்டகையில் தொட்டில் கட்டி தூங்க வைத்துள்ளார். 

 

இதற்கிடையே, ஜூலை 30- ஆம் தேதி காலை அந்த வழியாக சிலர் மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றபோது அந்த கொட்டகையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு திடுக்கிட்டனர். உடனே அங்கு சென்று பார்த்தபோது, தசரதன் மற்றும் தோழி சத்யா ஆகியோர் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குழந்தை தொட்டிலில் அழுது கொண்டிருந்தது. 

 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மகாராஜாகடை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், கிருஷ்ணகிரி டிஎஸ்பி தமிழரசி மற்றும் மகாராஜாகடை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். இருவரின் சடலங்களை மீட்டு, உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. 

 

இரும்பு கொட்டகையில் இரவு நேரத்தில் வரும் சில மர்ம நபர்கள், மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதை தடுப்பதற்காக, இரும்பு கொட்டகையைச் சுற்றிலும் தாமோதரன் மின்வேலியை அமைத்துள்ளார். 

 

இதையறியாத தசரதன் சத்யாவுடன் அங்கு சென்றுள்ளார். குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்களின் கைகள், மின் வேலியில் மோதியதால், மின்சாரம் பாய்ந்து இருவரும் இறந்துள்ளனர். 

 

இதையடுத்து தசரதனின் தந்தை தாமோதரனை காவல்துறையினர் கைது செய்தனர். தந்தை வைத்த மின்வேலியில் மகனும், தோழியும் மின்சாரம் பாய்ந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்