சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக விட்டு விட்டு மழை பெய்த நிலையில் 2 நாட்களாக அதிக கனமழை பெய்தது. இதனால் வல்லம்படுகை, கடவாச்சேரி, வேளகுடி, அகர நல்லூர், பழைய நல்லூர், பொன்னாங்கண்ணி, மேடு நாஞ்சலூர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், வீராணம் ஏரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 6000 கன அடி எனும் நிலையில், உடனடியாக தண்ணீர் வடிய வழியில்லாமல் குடியிருப்புப் பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது. இதில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சாலை ஓரத்திலும், மேடான பகுதிகளிலும், இ சேவை மையம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வடிகால் வசதி செய்து தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அறிந்த தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சம்பந்தப்பட்ட வல்லம்படுகை, பரதேசி அப்பர் கோவில் தெருவில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தண்ணீர் தேங்கி நிற்பதற்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் உடனடியாக தண்ணீர் வடிவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இவருடன் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், உதவி ஆட்சியர் ஸ்வேதாசுமன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், திமுக குமராட்சி ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரகுமார், சங்கர், திமுக நிர்வாகிகள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகரன், ஸ்ரீதர், பாலசுப்ரமணியம், பரந்தாமன், அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்றத் தலைவர் பழனி, காவிரி டெல்டா விவசாயிகள் சங்க பாசன சங்கத் தலைவர் மதிவாணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.