Skip to main content

“எங்க ஊர்க்காரர் நீங்கள் ஒன்னும் நினைச்சுக்காதீங்க” - திருச்சி சிவாவுடன் இணைந்து கே.என். நேரு பேட்டி

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

 "Don't think anything of our countrymen"-KN Nehru interview with Trichy Siva

 

நேற்று முன்தினம் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவாவின் வீடு மற்றும் அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஆகியவை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

 

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் 5 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி சிவா, ''கட்சி தான் முக்கியம் என நினைப்பதால் இந்த விஷயங்களை பெரிதுப்படுத்த விரும்பவில்லை. இருப்பினும் இந்த நிகழ்வு எனக்கு மன வேதனை அளிக்கிறது. இது குறித்து எதுவும் நான் தெரிவிக்க விரும்பவில்லை'' என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திருச்சி சிவாவின் இல்லத்திற்கு கே.என். நேரு வருகை புரிந்து இருவரும் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். அவருடன் 200க்கும் மேற்பட்ட திமுகவினரும் அங்கு வந்திருக்கின்றனர்.

 

 "Don't think anything of our countrymen"-KN Nehru interview with Trichy Siva

 

இந்த சந்திப்புக்குப் பிறகு எம்.பி திருச்சி சிவாவும் அமைச்சர் கே.என்.நேருவும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது பேசிய கே.என். நேரு, ''இறகு பந்து மைதானம் திறந்து வைக்க வேண்டும் என்று சொன்னார்கள். அது எந்த இடத்தில் அமைந்துள்ளது என்று கூட எனக்கு தெரியாது. இங்கு சில பேர் எங்கள் அண்ணன் பெயர் போடாமல் எப்படி நீங்கள் இங்கு வரலாம் என்று கேட்டார்கள். அதற்கு நான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை போய் பாருங்கள் நான் என்ன பண்ணுவேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டேன். பிறகு நடக்கக் கூடாத ஒரு விஷயம் அதுவும் கழக குடும்பத்தில், அதுவும் கழகத்தில் உள்ள ஒருவருடைய வீட்டில் இப்படி நடந்துள்ளது. என்னுடைய துரதிஷ்டம் என்னவென்று சொன்னால் காவல்துறையினர் கருப்புக்கொடி காட்டியவர்களை ஏற்றுவதற்காக ஒரு பெரிய வேனை கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள். என்னுடைய வண்டி பின்னால் போய்விட்டது. அப்பொழுது நடக்கக் கூடாத விஷயம் நடந்து விட்டது. 

 

எனக்கு இது தெரியாது நான் தஞ்சை மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்று விட்டேன். அங்கு போன பிறகுதான் இதுபோன்று நடந்துவிட்டது. காவல்துறை ஆட்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னார்கள். நான், 'சிவா வந்துவிட்டாரா' என்று கேட்டேன். அவர் வெளிநாட்டிலிருந்து இன்னும் வரவில்லை என்றார்கள். கம்யூனிகேஷன் கேப்பில் இதுபோன்று நடந்து விட்டது. இனிமேல் இப்படி நடக்காது. தமிழக முதல்வர் 'நீங்கள் இருவருமே திருச்சியில் கழகத்தை கட்டிக் காத்து வருபவர்கள். உங்களுக்குள் இதுபோன்ற எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது' என்றார். எங்களுக்குள் எப்பொழுதுமே பிரச்சனை இல்லை அண்ணா அவர் எங்க ஊர்க்காரர் என்று சொன்னேன். 'நீ நேரா போய் அவரைப் பார்த்து சரி பண்ணிட்டு வா. சரி பண்ணிட்டு வா என்றால் சமாதானப்படுத்தி விட்டு வா உங்களுக்குள்ள எந்த சண்டையும் இல்லை என நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இது கழகத்திற்கும், ஆட்சிக்கும் நல்ல பெயர் வரும் என்று சொன்னார்கள்.

 

nn

 

சிவா என்னை விட இரண்டு வயது கம்மிதான். எங்க ஊர்க்காரர். அதனால் நீங்கள் ஒன்னும் நினைக்காதீர்கள். தெரிந்திருந்தால் நான் இதை அனுமதித்திருக்க மாட்டேன். முதல்வர் கேட்டபோது கூட நான் இதைச் சொன்னேன். நான் போய் ஏன் இந்த வேலையை செய்யப்போறேன் என்று சொன்னேன். சிவாவும் திமுகவில் மூத்த தலைவர். பாராளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு அவமதிப்பு ஏற்பட்டுவிட்டால் அது கழகத்திற்கு நல்லதல்ல. ஆறு மணிக்கு அவரை பார்த்துவிட்டு உங்களிடம் பேசுகிறேன் என்றேன். வந்து விட்டேன். பார்த்து விட்டேன். இனி இந்த மாதிரி எதுவும் நடக்காது. நடக்கவும் கூடாது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்