Skip to main content

பத்து மணிக்குள் உணவு விடுதிகளை மூட உத்தரவிட கூடாது - காவல்துறைக்கு எதிராக வழக்கு

Published on 20/03/2018 | Edited on 20/03/2018
hotel

 

தமிழகத்தில் உள்ள உணவு விடுதிகளை 10 மணிக்குள் மூட வேண்டும் என்ற காவல்துறையின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் காவல்துறை விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 


சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கணேஷ் பிரபு தாக்கல் செய்த பொது நல வழக்கில்  "மேற்கு மாம்பலத்தில் தாம் பத்து மணிக்கு ஹோட்டலுக்கு சென்ற போது உணவு வழங்க முடியாது, காவல்துறையினர் இரவு பத்து மணிக்குள்ளாக கடையை மூட வேண்டுமென்று உத்தரவிட்டிருப்பதாகவும் அப்படி மூடவில்லை என்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்திருப்பதால் தமக்கு உணவு வழங்காமல் திருப்பி அனுப்பி விட்டனர் என்று மனுவில் தெரிவித்துள்ளார். 

 


இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு மனு அளித்தேன். இதற்கும் காவல்துறைக்கும் சம்மந்தம் இல்லை என விளக்கம் அளித்தனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பித்த அரசாணையில் 365 நாட்களும் கடையை திறந்து வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அரசானையை மீறி காவல்துறை இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் கேரள நீதிமன்றமும் கடந்த 2016ஆம் ஆண்டு இரவு 11க்கு  மேல் கடைகளை மூடலாம் என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

 


இந்நிலையில் தமிழகத்தில் இரவு பத்து மணிக்குள்ளாக கடைகளை மூடுவது என்பது கடைகள் மற்றும் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் , இதை போலவே மஹாராஷ்டிராவிலும் 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைத்திருக்கலாம் என கடந்த ஆண்டு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. எனவே இரவு பத்து மணிக்குள்ளாக அனைத்து உணவு விடுதிகளையும் மூட சொல்லி காவல்துறையினர் மிரட்டுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். பத்து மணிக்குள் உணவு விடுதிகளை மூட உத்தரவிட கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

 


இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்த போது இது தொடர்பாக வெள்ளிக்கிழமைக்குள் காவல்துறை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்