Skip to main content

புதிய கல்விக்கொள்கை ஆலோசனை - தமிழக அரசு புறக்கணிப்பு!

Published on 17/05/2021 | Edited on 17/05/2021

 

NEW EDUCATION POLICY UNION EDUCATION MINISTER DISCUSSIONS VIDEO VIA

 

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாகவும், கரோனா நோய்த்தொற்று காலத்தில் கல்வி அமைப்பு மேலாண்மை, பள்ளிகளில் இணைய வழி கல்வி தொடர்வதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் அனைத்து மாநில கல்வித்துறைச் செயலாளர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று (17/05/2021) காலை 11.00 மணிக்கு காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது.

 

கல்வித்துறைச் செயலாளருக்குப் பதில் கல்வி அமைச்சருடன் ஆலோசிக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரியிருந்தார். அதேபோல், புதிய கல்விக்கொள்கை நுழைய அனுமதிக்க மாட்டோம் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் கூறியிருந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

 

இது தொடர்பாக தனியார் செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "கல்வி அமைச்சரை ஆலோசனைக்கு அழைக்காமல், துறை அதிகாரியை மத்திய அரசு அழைத்தது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் செயலைக் கண்டிக்கும் விதமாகவே தமிழக அரசு ஆலோசனையைப் புறக்கணித்தது. கல்விக்கொள்கை விவகாரத்தில் மத்திய அரசிடம் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் எண்ணம் இல்லை. கல்வி அமைச்சரிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை. புதிய கல்விக்கொள்கை விவகாரத்தில் முதல்வரின் உத்தரவுபடி செயல்படுவோம்" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்