Skip to main content

மலைக் கிராம மாணவியின் கனவை நினைவாக்கிய தி.மு.க எம்.எல்.ஏ

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

DMK mla i senthilkumar helped girl study

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் வெள்ளகவி அடுத்து சின்னூர் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் மகாலட்சுமி பிளஸ் டூ முடித்துவிட்டு பி.எஸ்.சி நர்சிங் படிப்பில் சேர விண்ணப்பித்தார். அதற்காக கவுன்சிலிங்கில் பங்கேற்ற அவருக்குத் தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் கல்விக் கட்டணம் செலுத்த வசதி இல்லாததால், படிக்க முடியாமல் பெற்றோருடன் கூலி வேலைக்குச் சென்று வந்தார். 

 

தேனி மாவட்டத்தில் உள்ள போடியில் பிளஸ் டூ வரை மாணவி மகாலட்சுமியை அவரது பெற்றோர் கூலி வேலை செய்து படிக்க வைத்தனர். பெற்றோரின் சிரமத்தை அறிந்து நன்றாகப் படித்து பிளஸ் டூ தேர்வு 470 மதிப்பெண்கள் எடுத்ததின் பேரில் உயர்கல்வி படிக்க மாணவி விரும்பினார். கிராமத்திற்குப் பாதை வசதி இல்லாததால் 3 காட்டாறுகள் கடந்து நடந்து செல்ல வேண்டும். இதனால் கர்ப்பிணிகள் நோயாளிகளை டோலி கட்டி ஆறு கிலோமீட்டர் வரை தூக்கிச் சென்று ஆஸ்பத்திரியில் சேர்ப்பார்கள். அதனாலேயே கிராம மக்களுக்கு உதவி செய்ய பி.எஸ்.சி. நர்சிங் படிக்க நினைத்த மாணவிக்கு கவுன்சிலிங்கில் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால், அந்தக் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் படிக்க ஒன்றரை லட்சம் வரை செலவாகும் என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் கூலி வேலை செய்யும்  பெற்றோரால் அது இயலாத காரியம். ஏழ்மையால் உயர்கல்வி கனவு நிறைவேறாமல் மாணவி கூலி வேலைக்குச் சென்றுள்ளார். இதையடுத்து, அந்த மாணவி பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்குத் தமிழக அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கையும் வைத்து வந்தார்.

 

இந்த விஷயம் எம்.எல்.ஏ  ஐ.பி. செந்தில்குமாருக்குத் தெரிய வர உடனே மாணவி மகாலட்சுமியை போன் மூலம் தொடர்பு கொண்டு பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கான 4 ஆண்டுக்கான முழுக் கட்டணத்தையும் தானே ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளார். அதைக் கேட்டு மாணவியும் அவருடைய பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதைத் தொடர்ந்து, மறுநாளே அந்த மாணவியையும், பெற்றோரையும் பழனிக்கு வரச் சொல்லி உறுதி அளித்தார். அதுபோல் அந்த தனியார் கல்லூரி நிர்வாகத்தையும் தொடர்பு கொண்டு மாணவியை  உடனடியாகச் சேர்க்கவும் உத்தரவிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்