Skip to main content

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் மனு தள்ளுபடி

Published on 18/07/2023 | Edited on 18/07/2023

 

Dismissal of complaint against Edappadi Palaniswami

 

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு தொடர்பான புகாரை விசாரிக்க கோரிய ஆர்.எஸ். பாரதியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 

அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கியதில் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

 

அதன்படி இந்த வழக்கு விசாரணை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கடந்த 2018 இல் லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த அறிக்கையில் தவறில்லை. ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையில் குறைபாடுகளைக் காண முடியாது. ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை எனவே எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு தொடர்பான புகாரை விசாரிக்க கோரிய ஆர்.எஸ். பாரதியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறது என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்