உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தவாறே உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறுகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. மேலும் வரும் 14-ந்தேதி வரை மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து தமிழகத்திலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதியிலும் அதிநவீன இயந்திரங்களை கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இதனை சிதம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அடிக்கப்படும் மருந்தின் தன்மை குறித்து கேட்டறிந்தார். இதனைத்தொடர்ந்து துய்மை பணியில் ஈடுபடும் துய்மை பணியாளர்களுக்கு சிதம்பரம் அம்மா உணவகத்தில் உணவுகளை அவர்களுக்கு வழங்கி உணவின் தரத்தை ஆய்வு செய்தார். மேலும் சிதம்பரம் நகராட்சியில் அத்தியாவாசிய பொருட்கள் கிடைக்கும் காய்கறி கடைகள், மெடிக்கல் உள்ளிட்ட கடைகளில் பொதுமக்கள் 1-மீ இடைவெளியிட்டு நிற்க வேண்டும் என்று அறிவுறுத்தும் வகையில் அடையாள குறியீடு ஒவ்வொறு கடைகளின் முன்பு வரைந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா, பொறியாளர் மகாதேவன், சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன், ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் தூய்மை பணி ஊழியர்கள் இதில் கலந்துகொண்டனர்.