Skip to main content

750 ஆண்டுகள் பழமையான குலசேகரபாண்டியன் கல்வெட்டு கண்டெடுப்பு!

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

Discovery of the 750 year old Kulasekara Pandyan Inscription!

 

அரசனேரி கீழமேட்டைச் சேர்ந்த சரவணன், சூரக்குளத்தில் கல்வெட்டு ஒன்று இருப்பதாக சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு தகவல் தெரிவித்தார். சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா, பொருளாளர் ம. பிரபாகரன் ஆகியோர் அவ்விடத்திற்குச் சென்று கல்வெட்டை ஆய்வு செய்தனர்.

 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா தெரிவித்ததாவது, "சிவகங்கைக்கு மிக அருகில் சூரக்குளம் புதுக்கோட்டை அமைந்திருந்தாலும் அது காளையார்கோவில் வட்டத்தைச் சேர்ந்ததாகும். சூரக்குளத்திலிருந்து நாட்டரசன்கோட்டை செல்லும் வழியில், தொடர்வண்டி இருப்புப் பாதையின் சுரங்கத்தை ஒட்டிய பகுதியில் உள்ள மிகுந்த இடிபாடுடன் கூடிய நான்கு கால் மண்டபத்தின் தெற்குப் பகுதியில் இக்கல்வெட்டு அமைந்துள்ளது. சுமார் நான்கரை அடி நீளத்தில் ஒரு அடி அகலத்தில் ஐந்து வரிகளைக் கொண்டதாக இந்தத் துண்டுக் கல்வெட்டு காணப்படுகிறது.

 

கல் மண்டபம்:

சிவகங்கையில் இருந்து சூரக்குளம் வழியாக நாட்டரசன்கோட்டை செல்லும் வழியில் பழமையான நான்கு கால் மண்டபம் இடிந்த நிலையில் உள்ளது. இது முன்பொரு காலத்தில் இவ்வழியில் செல்வோருக்கு இளைப்பாறும் மண்டபமாகவும் நீர் அருந்தும் இடமாகவும் இருந்திருக்கலாம். இப்பகுதியில் உள்ள காட்டுக்கோவில்கள் நாட்டரசன்கோட்டை மக்கள் வழிபடும் கோவில்களாக உள்ளன. காட்டுக்கோவில்களுக்கு செல்வோருக்கு நீர் வேட்கையைத் தணிக்க இம்மண்டபம் அமைக்கப் பெற்றிருக்கலாம்.

Discovery of the 750 year old Kulasekara Pandyan Inscription!

 

குலசேகர பாண்டியனின் கல்வெட்டு:

குலசேகர பாண்டியனின் ஏழாம் ஆட்சியாண்டில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268 முதல் 1311 வரை ஆட்சி செய்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இக்கல்வெட்டு 1275ஆம் ஆண்டு வெட்டப்பெற்றதாகக் கொள்ளலாம்.

 

கல்வெட்டு:

ஸ்ரீ கோமார பன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் குலசேகர தேவர்க்கு யாண்டு 5வதின் எதிராவதின் எதிராம் முடிகொண்ட சோழபுரத்து திருச்சிவணமுடைய நாயனார் கோயில் தானத்தார் கோயில் இவ்வூர் உய்யவந்தான் எட்டி உள்ளிட்டார்க்கு எழுத்து வெட்டிக் குடுத்துடம் நாயனாருக்கு இவர்கள் தேவதானமாக விட்டுக் கொடுத்த நிலம் பட்டனவ என உள்ளது.

 

கல்வெட்டுச் செய்தி:

ஸ்ரீகோமார பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் குலசேகர தேவர்க்கு ஏழாம் ஆண்டு முடிகொண்ட சோழபுரத்தில் உள்ள திருச்சிவணமுடைய நாயனார் கோவில் தானத்தார் எனும் கோவில் அலுவலர்கள் இவ்வூரைச் சேர்ந்த உய்யவந்தான் எட்டி உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை அவர்கள் இறைவனுக்கு தேவதானமாக விட்டுக்கொடுத்த செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது. இது துண்டுக் கல்வெட்டாக உள்ளது.

 

தானத்தார்:

இக்கல்வெட்டில் கோயில் தானத்தார் என வருகிறது. தானத்தார் என்பவர் கோவிலை நிர்வகிப்பதற்காக அரசர்களால் நியமிக்கப்பட்டுவந்துள்ளனர். கோவில் நிர்வாகம், நிலம் தொடர்பான பழமையான பல கல்வெட்டுகளில் தானத்தார் என்கிற சொல் காணப்படுகிறது.

Discovery of the 750 year old Kulasekara Pandyan Inscription!

 

முடிகொண்ட சோழபுரம்:

சோழபுரத்தில் ஓட்டை கோவில் மண்டபம் என அழைக்கப்பெறும் 13ஆம் நூற்றாண்டு மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தைய சிவன் கோவிலுக்கு அம்மன்னனை அடுத்து வந்த அரசர் காலத்திலும் நிலங்களைத் தானமாக வழங்கப்பட்டதைக் கல்வெட்டு வாயிலாக அறிய முடிகிறது மேலும், இக்கல்வெட்டு வேறு எங்கிருந்தோ கட்டுமானப் பணிக்காக இங்கு கொண்டுவந்து இக்கல்மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கலாம். 745 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கிடைத்திருப்பதில் சிவகங்கை தொல்நடைக்குழு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது" என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்