Skip to main content

வீணாகும் நிகர்நிலை பல்கலை மருத்துவ இடங்கள்: அரசே நிரப்ப வேண்டும்! ராமதாஸ்

Published on 01/09/2017 | Edited on 01/09/2017
வீணாகும் நிகர்நிலை பல்கலை மருத்துவ இடங்கள்: அரசே நிரப்ப வேண்டும்! ராமதாஸ்

வீணாகும் நிகர்நிலை பல்கலை மருத்துவ இடங்களை அரசே நிரப்ப வேண்டும் என்றும், இனி வரும் காலங்களில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புக்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே நிர்ணயிக்கவும் வகை செய்யப்பட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழ்நாட்டில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மொத்தம் 947 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக கிடக்கின்றன. உச்சநீதிமன்றம் விதித்துள்ள காலக்கெடுவுக்குள் அந்த இடங்களில் சேர மாணவர்கள் எவரும் முன்வர மாட்டார்கள் என்பதால் அந்த இடங்கள் யாருக்கு பயன்படாமல் போகக்கூடும்.

தனியாருக்கு சொந்தமான நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை இதுவரை அந்தந்த பல்கலைக்கழகங்களின் நிர்வாகங்களே நடத்தி வந்தன. நடப்பாண்டில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கையை மருத்துவ சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகமே நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்த நிலையில், அதன்படியே மொத்தம் 3 கட்ட கலந்தாய்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் 3 கலந்தாய்வுகளுக்கு பிறகும் தேசிய அளவில் 5226 இடங்களும், தமிழகத்தில் 947 இடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 8 மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மொத்தம் 1349 இடங்கள் உள்ளன. இவற்றில் 1185 இடங்கள் உள்நாட்டு மாணவர்களைக் கொண்டும், 164 இடங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களைக் கொண்டும் நிரப்பப்பட வேண்டும். ஆனால், இதுவரை நடந்த 3 கலந்தாய்வுகளில்  உள்நாட்டு மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 376 இடங்கள், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் 26 இடங்கள் என மொத்தம் 402 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. மீதமுள்ள 947 இடங்கள் காலியாக உள்ளன. 3 கட்ட கலந்தாய்வுகளில் நிரப்பப்படாத இடங்களை அந்தந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிடமே மத்திய அரசு ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுகுறித்த வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றமோ, மத்திய அரசுக்கு இம்மாதம் 7-ஆம் தேதி வரை மேலும் ஒரு வார அவகாசம் கொடுத்து அவர்களே இந்த இடங்களை நிரப்ப வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நிரப்பப்படாத இடங்களை அவற்றின் நிர்வாகத்திடமே ஒப்படைத்து கல்விக்கொள்ளைக்கு வழிவகுக்காமல், மத்திய அரசு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், உச்சநீதிமன்றம் அளித்த கெடுவுக்குள் இந்த இடங்களை நிரப்ப முடியாது என்பது தான் உண்மை. காரணம் நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களின் கட்டண விகிதம் தான். தமிழக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக் கல்விக்கட்டணமாக ரூ.18 லட்சம் முதல் ரூ.22.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது தவிர ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரை கூடுதலாக செலவாகும் என்பதால் ஒரு மாணவர் ஆண்டுக்கு ரூ.27 லட்சம் வரை செலவழிக்க வேண்டியிருக்கும். ஒட்டுமொத்தமாக மருத்துவம் பயில ரூ. ஒன்றரை கோடி  செலவாகும் என்பதால் தான் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பில் சேர எவரும் முன்வரவில்லை.

ஆகவே, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ இடங்களை நிரப்புவதற்கு உடனடியாக செய்ய வேண்டியது கட்டணக் குறைப்பு தானே தவிர, கால நீட்டிப்பு அல்ல. மருத்துவக் கல்விக்கான  கட்டணத்தை குறைக்காமல் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களை நிரப்ப முடியாது. நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்களுடன் சேர்த்து தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடந்தது என்பதையும், அதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விட்டன என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்களுக்கு தளர்த்தப்பட்ட விதிமுறைகளுடன் செப்டம்பர் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நீட்டிக்கப்பட்ட கலந்தாய்வும் பயனளிக்காத பட்சத்தில் 900-க்கும் மேற்பட்ட இடங்கள் வீணாகப் போவதை மத்திய, மாநில அரசுகளும், உச்சநீதிமன்றமும் அனுமதிக்கக் கூடாது. அந்த இடங்களை தமிழக அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்சக் கட்டணத்தை அவற்றுக்கான கல்விக்கட்டணமாக அறிவித்து அதை அரசே வசூலித்து நிகர்நிலைப் பல்கலை.களுக்கு  வழங்கலாம். இதன்மூலம் நிரப்பப்படாத நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ இடங்களுக்கு மாணவர்கள் கிடைப்பர். மாணவர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்த கட்டணத்தில் மருத்துவப் படிப்பு கிடைக்கும். இரு தரப்பும் பயனடைவார்கள்.

எனவே, நிரப்பப்படாத நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கி, அரசு நிர்ணயித்தக் கட்டணத்தில் நிரப்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் இனி வரும் காலங்களில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புக்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே நிர்ணயிக்கவும் வகை செய்யப்பட வேண்டும்.

சார்ந்த செய்திகள்