Skip to main content

வீரபாண்டி ராஜா மரணம் தனி மனித மறைவு அல்ல; தூண் சாய்வது போல! மு.க.ஸ்டாலின் இரங்கல் !!

Published on 03/10/2021 | Edited on 03/10/2021

 

The death of Veerapandi Raja was not an individual human death; As the pillar leans! MK Stalin's condolences !!

 

திமுக முன்னாள் எம்எல்ஏ வீரபாண்டி ராஜா மரணம் என்பது தனி மனித மறைவு அல்ல; தூண் சாய்வது போல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

சேலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், முன்னாள் எம்எல்ஏ மற்றும் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளருமான வீரபாண்டி ராஜா, சனிக்கிழமை (அக். 2) மாரடைப்பால் திடீரென்று காலமானார். அவருடைய மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டம் பூலாவரியில் உள்ள அவருடைய உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். 

 

வீரபாண்டி ராஜாவின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், "சேலத்து சிங்கம் வீரபாண்டியாரின் மகனும், சேலம் மண்டலத்தில் திமுகவை  வளர்க்கும் வீரனாகவும் வலம் வந்தவர் அருமை சகோதரர் வீரபாண்டி ராஜா. இனிமையாய் பழகியும் அருமையான குணத்தாலும் அனைவரையும் ஈர்க்கும் பண்பு கொண்டவர் ராஜா. எந்த பொறுப்பைக் கொடுத்தாலும் அதனை திறம்பட செய்து முடிக்கக் கூடியவர். 

 

இளைஞரணி மாவட்ட அமைப்பாளர், மாவட்ட செயலாளர், தேர்தல் பணிக்குழு செயலாளர் என திமுக பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டதோடு, எம்எல்ஏ ஆகவும் திறம்பட மக்கள் பணியாற்றியவர். 

 

சேலத்திற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு அரசு விழாக்களில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது கூட, வீரபாண்டி ராஜாவை சந்தித்தேன். அன்போடு பேசிக்கொண்டிருந்தேன். அந்த வெள்ளை உள்ளம் கொண்ட புன்சிரிப்பை மறக்க முடியவில்லை. 

 

மிக இளமைக் காலத்தில் செழியனை இழந்தோம். மருத்துவமனை வாசலில் கலைஞர் வாய்விட்டு கதறும் அளவுக்கு நம்மை விட்டுப் பிரிந்தார் அண்ணன் வீரபாண்டியார். இதோ இப்போது வீரபாண்டி ராஜா. 

 

வீரபாண்டியார் குடும்பத்திற்கு என்ன ஆறுதல் சொல்வது? என்னை நானே எப்படித் தேற்றிக்கொள்வது? வீரபாண்டி ராஜா போன்றோர் மறைவு தனிமனித மறைவு அல்ல; தூண் சாய்வது போல. எந்நாளும் அவர் புகழ் நிலைத்திருக்கும். திமுக தொண்டர்கள் மனதில் எந்நாளும் ராஜா வாழ்வார். வீரபாண்டியார் குடும்பத்திற்கும், திமுக செயல்வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்