Skip to main content

மேட்டூர் அணை நீர்மட்டம் 71 அடியாக சரிந்தது: தண்ணீரில் மூழ்கி இருந்த நந்தி சிலை வெளியே தெரிய தொடங்கியது!

Published on 25/01/2019 | Edited on 25/01/2019
n


மேட்டூர் அணை நீர்மட்டம் 71 அடியாக சரிந்ததை அடுத்து, இதுநாள் வரை தண்ணீருக்குள் மூழ்கிக் கிடந்த ஜலகண்டேஸ்வரர் கோயிலின் நந்தி சிலை வெளியே தெரிய தொடங்கியுள்ளது.


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அடியோடு சரிந்து  விட்டது. அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் வரத்து சற்று அதிகரிக்கிறது. 


அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு  ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. வரத்தைக்  காட்டிலும், நீர்திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. 


புதன்கிழமையன்று (ஜனவரி 23) 71.80 அடியாக இருந்த நீர்மட்டம், வியாழக்கிழமை (ஜனவரி 24) காலை 71.70 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 34.17 டிஎம்சி ஆக இருந்தது. நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோயிலின் நந்தி சிலை, நீருக்கு வெளியே தெரிய தொடங்கியுள்ளது.


மேட்டூர் அணை கட்டப்பட்டபோது, தண்ணீர் தேங்கும் பகுதியாக 60 சதுர மைல் பரப்பளவு கணக்கிடப்பட்டது. இந்த பரப்பளவில் அமைந்திருந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். அப்போது முக்கிய வழிபாட்டுத் தலமாக இருந்த கடவுள் சிலைகளை எடுத்துக்கொண்டு, கோயில்களை அப்படியே விட்டுவிட்டனர்.


அவ்வாறு கிராம மக்கள் விட்டுச்சென்ற கோயில்களில் மேட்டூர் பண்ணவாடி பரிசல் துறையில் உள்ள பெரிய நந்தி சிலையுடன் கூடிய ஜலகண்டேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும்.


மேலும், 100 அடி உயரம் கொண்ட கிறிஸ்தவ தேவாலயம், கோட்டைர் பகுதியில் உள்ள தொன்மைவாய்ந்த கோட்டை, கீரைக்காரனூர் பகுதியில் உள்ள சோழப்பாடி வீரபத்ரன் கோயில், மீனாட்சி அம்மன் கோயில் ஆகியவற்றையும் விட்டுவிட்டுச் சென்றனர்.


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடிக்குக் கீழே குறையும்போது, அதுவரை நீருக்குள் மூழ்கி இருந்த கோயில்கள் தென்படத்தொடங்குகின்றன. முதலில் கிறிஸ்தவ தேவால கோபுரம் தெரியத் தொடங்கியது. 


தற்போது நீர்மட்டம் 71 அடியாக சரிந்த நிலையில் ஜலகண்டேஸ்வரர் கோயிலின் நந்தி சிலையும் ஒரு அடி உயரத்திற்கு தெரியத் தொடங்கியுள்ளது.
 

சார்ந்த செய்திகள்