வருகிற மே 3- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போதைக்கு டாஸ்மாக் கடைகளைத் திறக்க வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் நோய்த்தொற்று அபாயம் இருப்பதால் தனித்திருத்தல் மற்றும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் கூட்டம் கூடும் இடங்களான திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவை மட்டுமின்றி தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டன.
இந்நிலையில், மதுவுக்கு அடிமையானவர்கள் மாற்று போதையைத் தேடி வார்னிஷ், சானிடைஸர் லோஷன் ஆகியவற்றைக் குடித்து உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. மற்றொருபுறம் கள்ளச்சாராய விற்பனையும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறப்பு குறித்து அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் புதன்கிழமை (ஏப். 15) கூறியதாவது:
ஊரடங்கு உத்தரவால் மின் கட்டணம் செலுத்துவதில் சில சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன. மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். கட்டணம் செலுத்தாவிட்டாலும், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட மாட்டாது. மின்வாரிய ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 45 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில் வசிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ எண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை. மக்களின் நலன்தான் அரசுக்கு முக்கியம். இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.