Skip to main content

இரயில்வே சுரங்க பாதையால் மக்கள் அவதி!

Published on 25/10/2019 | Edited on 25/10/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த செம்பளகுறிச்சி, கவணை, சித்தேரிக்குப்பம் உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரதான வழியாக ரயில்வே  சுரங்கப் பாதை உள்ளது. இச்சுரங்கப்பாதை அமைக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை பருவமழை காலங்களில் சுமார் 15 அடிக்கு மேல் தண்ணீர் நிரம்புவதும், அவ்வப்போது அக்கிராம மக்கள் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் செய்த பின்பு தண்ணீரை வெளியேற்றுவதும் வாடிக்கையாக உள்ளது. இக்கிராம மக்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக சுரங்கபாதை வேண்டாம் என்றும், இல்லாவிடில் மாற்று பாதை அமைத்து தரக் கோரியும் போராடி வருகின்றனர். 

 

இந்நிலையில் தற்போது பெய்த வடகிழக்கு பருவ மழையால் சுரங்கப் பாதை முற்றிலும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் 10- க்கும் மேற்பட்ட கிராமங்களின் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதால் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட அனைத்து தரப்பினரும் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் அச்சுரங்கப்பாதை மழைநீரால் நிரம்பியுள்ளதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களை கழுவும் வாட்டர் சர்வீஸ் ஸ்டேசனாக மாறி வருகிறது. 
 

cuddalore railway track incident peoples strike


 

இதுமட்டுமில்லாமல் நெடுந்தூரம் பயணத்தில் ஈடுபடும் கனரக வாகன ஓட்டிகளின் நீச்சல் குளமாகவும் திகழ்ந்து வருகிறது. அதேசமயம் இப்பாதையை பயன்படுத்த முடியாமல் 10- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியவாசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் இரயில்வே நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் தக்க நடவடிக்கை எடுக்கவிட்டால், வருகின்ற 30.10.2019 ஆம் தேதி சுரங்கபாதை அமைந்துள்ள இடத்தில் மாபெரும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்