Published on 28/04/2020 | Edited on 28/04/2020
கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் ஆகியோர் கடலூரில் டவுன்ஹால், பேருந்து நிலையம், சாவடி, திருப்பாதிரிப்புலியூர் ஆகிய பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆட்சியர் அன்புச்செல்வன், “அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்வதற்கு நகராட்சிகள் மூலம் அனுமதி சீட்டு மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பொதுமக்கள் அனுமதி சீட்டுடன் வெளியே செல்கிறார்களா? என இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்டத்தில் 26 நபர்களுக்கு கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல், தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வரும்போது முக கவசம் இல்லாமல் வருபவர்களுக்கு ரூபாய் 100 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.